Published : 19 Jul 2024 06:15 AM
Last Updated : 19 Jul 2024 06:15 AM
புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டார் நேற்று 2-வது முறையாக திறக்கப்பட்டது. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டாரை, புனரமைப்பு பணிக்காக திறக்க மாநில அரசின் அனுமதியை தொல்பொருள் ஆய்வுத்துறை கோரியது.
இதையடுத்து 46 ஆண்டுகளுக்குப் பின் ரத்ன பண்டார் கடந்த கடந்த 14-ம் தேதி திறக்கப்பட்டது. அங்கு பழங்கால 7 சிறிய சுவாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுக்கு பூஜை செய்யப்பட்டு தற்காலிக பெட்டக அறைக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில், ஜெகந்நாதருக்கு வழிபாடு நடத்திய பின், ஒடிசா அரசால் நியமிக்கப்பட்ட மேற்பார்வை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ரத்ன பண்டார் நேற்று காலை 9. 51 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டது. இது குறித்து மேற்பார்வை குழுவின் தலைவரும் ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விஸ்வநாத் ராத் கூறியதாவது:
ரத்ன பண்டாரின் உள்அறையில் உள்ள பொக்கிஷங்களை மாற்றுவதற்கான பணிகள் சுமுகமாக நடைபெற வேண்டும் என பகவான் ஜெகந்நாதரிடம் வேண்டினோம். கடந்த 14-ம் தேதி ரத்ன பண்டார் திறக்கப்பட்டபோது அதில் இருந்தபொக்கிஷங்களை பெட்டக அறைக்கு மாற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.
பொக்கிஷ பொருட்கள் பெட்டக அறைக்கு கொண்டு செல்வதை மேற்பார்வையிடும் புரி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கஜபதி மகாராஜா திவ்ய சிங் தேவ்கூறுகையில், “ரத்ன பண்டாரின் உள் அறையில் உள்ள பொக்கிஷங்கள் பெட்டக அறைக்கு பலத்த பாதுகாப்புடன் மாற்றப்படும். இந்த பணிகள் ஒரு நாளில் முடியும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின் தற்காலிக பெட்டக அறை சீல் வைக்கப்படும். ரத்ன பண்டாரின் புனரமைப்பு பணிகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் மேற்கொள்வர். அதற்குள் சுரங்கப் பாதை இருக்கிறதா என தொல்பொருள் துறையினர் நவீன சாதனங்களை கொண்டு ஆய்வு செய்வர். புனரமைப்பு பணிகள் முடிந்த பிறகு, பொக்கிஷங்களின் பட்டியல் தயாரிக்கப்படும்” என்றார்.
புரி ஆட்சியர் சித்தார்த் சங்கர்ஸ்வைன் கூறுகையில், “ரத்ன பண்டார் அறைக்குள், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே செல்வர். பொக்கிஷங்களை மாற்றும் பணிகள் ஒரு நாளில் முடியவில்லை என்றால், செயல்பாட்டு நடைமுறைகள்படி இந்தப் பணிகள் தொடரும். ரத்ன பண்டார் அறைக்குள் அனைத்து பணிகளும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன” என்றார்.
ரத்ன பண்டார் அறை திறப்பின் போது பாம்புகள் ஏதேனும் வந்தால், அதற்காக பாம்பு பிடிக்கும் நபர்கள், தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என ஒடிசா அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT