Published : 17 May 2018 07:51 AM
Last Updated : 17 May 2018 07:51 AM
ஆந்திர மாநிலம் குண்டூரில் 10 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க கோரி, சிறுமியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை தீயிட்டு கொளுத்தினர். போலீஸாரையும் அடித்து உதைத்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, குண்டூரில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பழைய குண்டூர் பகுதியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து, அந்த சிறுமியின் பெற்றோர் பழைய குண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிந்து, அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர், நேற்று குண்டூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு சிறுமியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் அமளியில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸார் தடுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து கண்ணாடி, கம்ப்யூட்டர், மேஜை, நாற்காலி போன்றவற்றை அடித்து நொறுக்கினர். மேலும், போலீஸ் நிலையத்திற்கும் தீ வைத்தனர். அங்கிருந்த போலீஸ் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதில் பெரும் பதற்றம் நிலவியது. போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
தடுக்க வந்த 100-க்கும் மேற்பட்ட போலீஸாரை அடித்து உதைத்தனர். இதில் பலர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து போலீஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் நடக்கலாம் என கருதப்படுவதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய போலீஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT