Published : 18 Jul 2024 05:18 PM
Last Updated : 18 Jul 2024 05:18 PM

உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

கோண்டா: உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் நகர் வரை செல்லும் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கம்போல் நேற்றிரவு (ஜூலை 17) 11.20-க்கு புறப்பட்டது. இன்று மதியம் 2 மணி அளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா நிறுத்தத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி ரயில் பயணித்து கொண்டிருந்தது. அப்போது கோண்டா மற்றும் ஜுலாஹி ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள பிகவுரா என்ற இடத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஜுலாஹி ரயில் நிலையத்துக்கு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பு உள்ள பிகவுரா என்ற இடத்தில் இந்த ரயிலின் ஏசி கோச்சின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்து குறித்து அறிந்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த கோண்டா மாவட்ட ஆட்சியர் நேஹா ஷர்மா, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 8 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. 2 பேர் உயிரிழந்ததாக பதிவாகி இருக்கிறது. மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தயாராக இருந்த அனைத்து ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்தை அடைந்துள்ளன. மீட்புப் பணியில் உள்ளூர் மக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 40 பேர் கொண்ட மருத்துவக் குழுவும், 15 ஆம்புலன்ஸ்களும் விரைந்தன. இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்பாக வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாக ரயிலின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கோண்டா மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x