Published : 18 Jul 2024 04:21 PM
Last Updated : 18 Jul 2024 04:21 PM

‘பருவமழை கால சலுகை’ | உ.பி. பாஜக பிளவு ஊகத்துக்கு இடையே அகிலேஷ் யாதவின் சூசக பதிவு

அகிலேஷ் யாதவ் | கோப்புப்படம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநில பாஜகவில் பிளவு என்ற ஊகத்துக்கு மத்தியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (வியாழக்கிழமை) சமூக வலைதளத்தில் ‘பருவமழை கால சலுகை’ என்று சூசக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அப்பதிவில், "பருவமழை கால சலுகை: 100 தாருங்கள், அரசாங்கத்தை அமைக்கலாம்" என்று தெரிவித்துள்ளார். தனது பதிவில் யாருடைய பெயரையும் அகிலேஷ் குறிப்பிடவில்லை என்றாலும், பெயர் குறிப்பிட விரும்பாத சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஒருவர் குறிப்பிடுகையில், “பாஜகவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள், அணி மாற விரும்புபவர்களுக்கான செய்தி இது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “கடந்த 2022-ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வென்றது. நாங்கள் 100 அதிருப்தி பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவினைப் பெறுவோமானால் எங்களால் எளிதாக அரசு அமைக்க முடியும்” என்று விளக்கம் அளித்தார்.

உத்தரப் பிரதேச மாநில பாஜகவில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற ஊகம் பரவி வருகிறது. இந்தநிலையில் மாநிலத்தின் துணை முதல்வரும், மாநில பாஜக தலைவருமான கேசவ் பிரசாத் மவுரியா புதன்கிழமை வெளியிட்ட சமூகவலைதள பதிவொன்றில், “அரசாங்கத்தை விட கட்சி பெரியது” என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் கட்சிக்கார்களை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

முன்னதாக, மவுரியா செவ்வாய்க்கிழமை டெல்லி சென்று பாகஜ தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்திருந்தார். ஆனால் பாஜகவோ, உத்தரப் பிரதேச துணை முதல்வரோ இந்த சந்திப்பு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு இடையில் சுமுகமான உறவு இல்லை என்று நீண்ட காலமாக ஊகம் நிலவி வருகிறது. தனிப்பட்ட முறையில், இந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்கள் உட்பட பல்வேறு மாநில பாஜக தலைவர்கள், முதல்வர் ஆதித்ய நாத்தின் முதல்வரின் பணி பாணியினை விமர்சிப்பதுடன் தங்களின் தோல்விக்கு அதுவே காரணம் எனக் கூறி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x