Published : 18 Jul 2024 01:41 PM
Last Updated : 18 Jul 2024 01:41 PM

ரீல்ஸ் எடுக்கும்போது பரிதாபம்: 300 அடி பள்ளத்தில் விழுந்து மும்பை இன்ஸ்டா பிரபலம் உயிரிழப்பு

ஆன்வி கம்தார்

மும்பை: பாறையின் உச்சியில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இன்ஸ்டா பிரபலமான ஆன்வி கம்தார் உயிரிழந்தார். அவருக்கு வயது 27.

மும்பையைச் சேர்ந்தவர் ஆன்வி கம்தார். @theglocaljournal என்ற ஐடியின் மூலம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பயணம் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் ரய்காட் மாவட்டத்தில் உள்ள பிரபலமான கும்பே நீர்வீழ்ச்சிக்கு கடந்த ஜூலை 16 அன்று தனது நண்பர்கள் குழுவுடன் ஆன்வி கம்தார் சென்றுள்ளார். அப்போது தனது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக அங்கிருந்த பாறையின் ஓரத்தில் நின்றபடி ஆன்வி வீடியோ எடுத்துள்ளார். அப்போது கால்தவறி 300 அடி பள்ளத்தாக்கில் அவர் விழுந்துள்ளார்.

இதனால் பதறிப்போன அவரது நண்பர்கள் உடனடியாக அருகில் இருந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர். இந்த மீட்புப் பணியில் கடலோர காவல்படை, மின்வாரிய ஊழியர்களும் ஈடுப்பட்டனர்.

ஆன்வி விழுந்த பகுதிக்குச் சென்ற மீட்பு படையினர் சுமார் ஆறு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவரை மேலே கொண்டு வந்துள்ளனர். கடுமையான காயங்களுடன் இருந்த அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் ஆன்வி கம்தார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தவுடன், அப்பெண் கிட்டத்தட்ட 300-350 அடிக்கு கீழே விழுந்திருப்பதை அறிந்து கொண்டோம். அவர் விழுந்த இடத்தை அடைந்த பிறகும், பலத்த மழை பெய்ததால், அவரை மேலே கொண்டு வருவது கடினமாக இருந்தது. எனவே கயிறை கட்டி அவரை மேலே தூக்க முடிவு செய்தோம். பாறையிலிருந்து தொடர்ந்து கற்கள் விழுந்து கொண்டே இருந்தது மீட்புப் பணியை மேலும் கடினமாக்கி விட்டது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x