Published : 17 Jul 2024 07:40 PM
Last Updated : 17 Jul 2024 07:40 PM

7 ஆண்டுகளில் 84,119 குழந்தைகளை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை: அரசு தகவல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி: கடந்த ஏழு ஆண்டுகளில், ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் ஆபத்தில் இருந்த 84,119 குழந்தைகளை ரயில்வேப் பாதுகாப்புப் படை மீட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "கடந்த ஏழு ஆண்டுகளில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), 'சிறு தேவதைகள்' என்ற மீட்பு நடவடிக்கைத் திட்டத்தை செயல்படுத்தி அதில் முன்னணியில் உள்ளது. இது பல்வேறு இந்திய ரயில்வே மண்டலங்களில் பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளை மீட்பதற்கான ஒரு பணியாகும். கடந்த ஏழு ஆண்டுகளில், ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் ஆபத்தில் இருந்த 84,119 குழந்தைகளை ரயில்வேப் பாதுகாப்புப் படை மீட்டுள்ளது.

'சிறு தேவதைகள்' என்பது ஒரு மீட்பு நடவடிக்கை மட்டுமல்ல. ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இது ஒரு உயிர்நாடியான செயல்பாடாக உள்ளது. 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு அண்மைக் காலம் வரையிலான தரவு கிடைத்துள்ளது. இது ரயில்வே பாதுகாப்புப் படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை விளக்குகிறது. ஒவ்வொரு மீட்பு நடவடிக்கையுமே சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020-ம் ஆண்டு சவாலாக இருந்தது. இது இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்தது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், RPF அந்த ஆண்டில் 5,011 குழந்தைகளை மீட்டது. ரயில்வே 135 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்களை அமைத்துள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினரால் (RPF) ஒரு குழந்தை மீட்கப்படும்போது, அவர்கள் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். அவர்கள் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x