Published : 17 Jul 2024 07:09 PM
Last Updated : 17 Jul 2024 07:09 PM
புதுடெல்லி: நாட்டில் வேலையின்மை விகிதம் 9.2 சதவீதத்தை எட்டியுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “நாட்டில் வேலையின்மை விகிதம் 9.2 சதவீதத்தை எட்டியுள்ளது. இளைஞர்கள் வேலைக்காக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் நரேந்திர மோடி இளைஞர்களின் இந்த பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை, கேட்பதில்லை. மாறாக, அனைத்து தரவுகளையும் புறக்கணித்து பொய்களை பரப்புவதில் மும்முரமாக உள்ளார். 4-5 ஆண்டுகளில் சாதனை படைக்கும் வேலைவாய்ப்பை கொடுத்துள்ளோம் என்று நரேந்திர மோடி வெளிப்படையாக பொய் சொல்கிறார்.
அதேசமயம் உண்மை இதுதான். நாட்டின் வேலையில்லாதவர்களில் 83% இளைஞர்கள். நாட்டில் டஜன் கணக்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளன. 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. 20-24 வயது இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 44.49%. வேலையில்லாத் திண்டாட்டத்தால் விரக்தியடைந்து, ஒரு மணி நேரத்திற்கு 2 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இளைஞர்கள் வேலைக்காக ரஷ்யா மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
நரேந்திர மோடி சிறு தொழில்களை அழித்து நாட்டில் வேலை வாய்ப்புகளை அழித்துவிட்டார். மோடி அரசின் கொள்கைகள், இளைஞர்களை வேலையில்லாச் சேற்றில் தள்ளியுள்ளது. ஆனால், இளைஞர்களின் பிரச்சினைகள் குறித்து நரேந்திர மோடி கவலைப்படுவதில்லை. மோடி தனது சொந்த உலகில் பிஸியாக இருக்கிறார். தனது நண்பர்களை பணக்காரர்களாக ஆக்குகிறார். இது தான் உண்மை. இளைஞர்களை வேலையில்லாமல் ஆக்கி நாட்டை நாசமாக்கிவிட்டார் நரேந்திர மோடி” என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT