Published : 03 May 2018 07:29 PM
Last Updated : 03 May 2018 07:29 PM
எஸ்சி,எஸ்டி சட்டத்தின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடியாது, அதற்குத் தடைவிதிக்கவும் முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
அதேசமயம், நாங்கள் அளித்த தீர்ப்பும், நீதிமன்றமும் என்பது தலித்சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும், அவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறவர்களை தண்டிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
எஸ்சி, எஸ்டி சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, உள்நோக்கத்துடன் சிலர் கைது செய்யப்படுகிறார்கள் அது குறித்து மறுபரிசீலனை செய்யக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில் எஸ்சி,எஸ்டி சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரணையில்லாமல் கைது செய்யக்கூடாது, அரசு ஊழியர்களைக் கைது செய்ய வேண்டுமானால், மூத்த அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்றுத்தான் கைது செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து இருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் கடந்த மாதம் 3-ம் தேதி தலித் அமைப்புகள் சார்பில் பாரத் பந்த் நடத்தப்பட்டது. அதில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொதுச்சொத்துக்கள் பல அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனைச் செய்யக்கோரி கடந்த 3-ம் தேதி மத்தியஅரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்ததாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தீர்ப்பை மறுஆய்வு செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதைத்தொடர்ந்து மத்திய அரசு மட்டுமல்லாமல், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தரப்பிலும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டன. அந்தந்த மாநில அரசுகளின் சார்பில் எழுத்துப்பூர்வ கருத்துக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு.லலித் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கிறிஞர் கே.கே. வேணுகோபால் வாதிட்டார். அவர் கூறுகையில், எஸ்சி,எஸ்டிசட்டத்தின் மீது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறு. அதை திரும்பப் பெற வேண்டும்.
இந்த திருத்தப்பட்ட சட்டத்தால், தலித் பிரிவினருக்கு எதிராக வன்முறைகள் அதிகரிக்கும். சமீபத்தில் கூட வடமாநிலம் ஒன்றில், குதிரையில் வந்த தலித் மணப்பெண்ணையும், மணமகனையும் ஒரு கும்பல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சட்டம் தலித்களுக்கு அளித்து வந்த அரசியலமைப்பு சட்டம் அளித்த பாதுகாப்பை நீர்த்துப்போகச் செய்யும்.
ஒரு அரசு ஊழியர் மீது புகார் கொடுத்தால் கூட அந்த ஊழியரின் உயர் அதிகாரியின் அனுமதி பெற்றுத்தான் கைது செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் ஏ.கே.கோயல் கூறுகையில், இப்போது என்ன நடந்துவிட்டது. விசாரணை அதிகாரிக்கு எந்த வழக்கும் கிடைக்கவில்லையென்றால், இந்தச் சட்டத்தின் கீழ் ஒவ்வொருவரும் கைது செய்யப்படுகிறார்களா?. எங்களின் தீர்ப்பு யாரையும் தலித்களுக்கு எதிராகக் குற்றம் செய்யச்சொல்லித் தூண்டவில்லை. எஸ்சி,எஸ்டி சமூகத்தினருக்கு இந்தத் தீர்ப்பும், நீதிமன்றமும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும். ஏன் அதிகாரிகள் நடவடிக்கை முடியாது. உடனடியாக தண்டிக்கவும் முறைகள் இருக்கின்றன. அரசு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும், பல்வேறு சமூகங்களும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நீதிபதி லலித் கூறுகையில், எங்களின் தீர்ப்பு போலீஸார் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்வதைத் தடுக்கவில்லை. குற்றம் செய்தது உறுதியானால், தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக ஒவ்வொரு புகாருக்கும் முதன்நிலைவிசாரணை என்பது கண்டிப்பாக செய்ய வேண்டியது இல்லை. இந்தத் தீர்ப்பு என்பது விசாரணையின்றி ஒருவர் உடனுக்குடன் கைது செய்வதற்கு எதிராக மட்டுமே இருக்கிறது. ஆதலால், தீர்ப்புக்குத் தடைவிதிக்க முடியாது. வழக்கு மீண்டும் இம்மாதம் 17-தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது எனத்தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT