Published : 17 Jul 2024 05:57 PM
Last Updated : 17 Jul 2024 05:57 PM

வலுக்கும் எதிர்ப்பு: கன்னடர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் முன்பு விரிவாக ஆலோசிக்க அரசு முடிவு

பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்துவதற்கான மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன் ஆழமான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில பெரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் எம்.பி.பாட்டீல் உறுதி அளித்துள்ளார்.

கர்நாடகாவில் கன்னட மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை பணியில் அமர்த்தும்போது, நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களை மட்டுமே நியமிப்பதை உறுதிப்படுத்துவதற்கான மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இது குறித்து முதல்வர் சித்தராமையா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளை 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை அடுத்து தொழில்துறையினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

முக்கிய தொழில் துறை தலைவர்களில் ஒருவரான கிரண் மஜும்தார் ஷா, “ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்ற வகையில், எங்களுக்கு திறமையான பணியாளர்கள் தேவை. உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, தொழில்நுட்பத்தில் எங்களின் முன்னணி நிலையை பாதிப்பதாக இருக்கக் கூடாது. மிகவும் திறமையானவர்களை நிறுவனத்தில் சேர்ப்பதற்கு ஏற்ப, இந்தக் கொள்கையில் சில விதிவிலக்குகள் அளிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மற்றொரு தொழில் துறை தலைவரான மோகன்தாஸ் பாய், இந்த மசோதா "பாரபட்சமானது, பிற்போக்குத்தனமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது" என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மிருகத்தனமான, பாசிச மசோதா இது. காங்கிரஸ் கட்சி இது போன்ற ஒரு மசோதாவைக் கொண்டு வருவதை நம்ப முடியவில்லை. ஓர் அரசு அதிகாரி, தனியார் துறையின் ஆட்சேர்ப்புக் குழுக்களில் அமர்வாரா? நாங்கள் என்ன மொழி தேர்வை நடத்த வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக ஆழமான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் எம்.பி.பாட்டீல் உறுதி அளித்துள்ளார். மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக, சட்ட அமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தொழிலாளர் அமைச்சர், மற்றும் பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சரான தான் ஆகியோர் கூட்டாக முதல்வரைச் சந்தித்து இந்த இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க இருப்பதாக உறுதியளித்தார்.

“கன்னடர்களின் நலன்களைப் பாதுகாப்பது மிக முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், தொழில்களும் வளர்ச்சியடைய வேண்டும். இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்கக் கூடிய சூழ்நிலையாக இது இருக்க வேண்டும். இதை மனதில் வைத்து, குழப்பங்களுக்கு தீர்வு காணப்படும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்வரின் எக்ஸ் பகிர்வை அடுத்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட், “தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இங்கே திறமையானவர்கள் இல்லாத நிலையில், வெளி நபர்களுக்கு வேலை வழங்குவதாக இருந்தால் அவர்கள் கர்நாடகாவில் தங்கி வேலை பார்க்க வேண்டும். கர்நாடகாவில் திறமையான நபர்கள் இருந்தால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மசோதா 2024, கர்நாடக சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, சட்டத்தின் விதிகளுக்கு முரணாக எந்த ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது மேலாளர் செயல்பட்டாலும் அவருக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் மீறல் தொடர்ந்தால், மேலும் அபராதம் விதிக்கப்படும். மீறல் தொடரும் வரை ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படலாம்" என்று மசோதா கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x