Published : 17 Jul 2024 12:54 PM
Last Updated : 17 Jul 2024 12:54 PM
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு முக்கியத் தலைவர்கள் விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த நான்கு முக்கியமான தலைவர்கள் அஜித் பவாரின் என்சிபி அணியில் இருந்து வெளியேறி மூத்த தலைவர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அணியில் சேர உள்ளனர். இதனால் அஜித் பவாருக்கு சிக்கல் உண்டாகியுள்ளது. பிம்ப்ரி சின்ச்வாட் பிரிவின் தலைவரான அஜித் கவாஹனே, மாணவர் தலைவர் யாஷ் சானே மற்றும் ராகுல் போஸ்லே, பங்கஜ் பாலேகர் ஆகியோர் அஜித் பவார் அணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதுகுறித்து அஜித் கவாஹனே கூறுகையில், “நான் நேற்று ராஜினாமா செய்தேன். இன்று நாங்கள் மற்றொரு சட்டப்பேரவைத் தொகுதியில் அனைத்து முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் சந்திக்க இருக்கிறோம். அங்கு எங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து நாங்கள் முடிவெடுப்போம். நாங்கள் பவார் சாஹேப்பின் (சரத் பவார்) ஆசிர்வாதத்தை பெறப்போகிறோம். நாங்கள் இணைந்து முடிவெடுப்போம்.” என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அஜித் பவாரின் அணியில் இருந்து மீண்டும் சரத் பவாரின் அணிக்குத் திரும்பலாம் என்ற ஊகத்திற்கு மத்தியில் இந்த ராஜினாமா நிகழ்ந்துள்ளது.
முன்னதாக, ஜுன் மாதம் சரத் பவார், கட்சியினை பலவீனப்படுத்த முயற்சித்தவர்களுக்கு கதவுகள் மூடப்பட்டுவிட்டது, என்றாலும் கட்சியின் பெயரினை களங்கப்படுத்தாமல் அமைப்பினை வலுப்படுத்தக்கூடிய தலைவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், அஜித் பவார் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு ராய்கட்டில் மட்டும் வெற்றி பெற்றது. சரத் பவாரின் கட்சி மக்களவைத் தேர்தலில் எட்டு இடங்களில் வென்றது. இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது.
கடந்த 2023-ம் ஆண்டு அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சரத் பவாரிடமிருந்து பிரிந்ததால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டு அணியாக பிளவுபட்டது. சரத் பவார் எதிர்க்கட்சிகளுடன் இருந்தநிலையில், அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே கூட்டணியில் இணைந்து துணைமுதல்வரானார்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, அஜித் பவார் தலைமையிலான என்சிபி கூட்டணியான மஹாயுதி மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மறுபுறம், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி), என்சிபி(சரத் பவார்) கட்சிகளின் மஹா விகாஸ் அகாதி கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றி இருந்ததது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT