Published : 17 Jul 2024 11:53 AM
Last Updated : 17 Jul 2024 11:53 AM
கொல்கத்தா: சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆர்.சி.பவுடியாலின் உடல் மேற்கு வங்கத்தின் சிலிகுரி அருகே கால்வாயில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவர் காணமல் போன ஒன்பது நாட்களுக்கு பின்பு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “80 வயதான பவுடியால் உடல் புல்பாரியில் உள்ள டீஸ்தா கால்வாயில் மிதந்த போது கண்டெடுக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சரின் உடல் டீஸ்தா ஆற்றின் வழியாக கீழே கொண்டு வரப்பட்டிருக்கலாம். அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம், உடைகளைக் கொண்டு அவர் அடையாளம் காணப்பட்டார்.
கடந்த ஜூலை 7ம் தேதி பாக்யோங் மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான சோட்டா சிங்டாமில் இருந்து காணாமல் போனார். அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெறும்” என்று தெரிவித்தனர்.
சிக்கிம் சட்டப்பேரவையின் முதல் துணை சபாநாயகராக இருந்த பவுடில்யா பின்னர் வனத்துறை அமைச்சராக இருந்தார். ரைசிங் சன் கட்சியின் நிறுவனரான அவர், 70, 80களில் இமையமலைப் பிரதேசத்தின் அரசியலில் முக்கியமான நபராக அறியப்பட்டார். அதே போல, சிக்கிமின் கலாச்சாரம் மற்றும் அதன் சமூக இயக்கம் பற்றிய ஆழ்ந்த புரிதலுக்காகவும் அறியப்பட்டார்.
பவுடில்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், “சிக்கிம் அரசின் அமைச்சராகவும், ஜுல்கே காம் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான ஆர்.சி.பவுடில்யாவின் திடீர் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT