Last Updated : 17 Jul, 2024 07:12 AM

4  

Published : 17 Jul 2024 07:12 AM
Last Updated : 17 Jul 2024 07:12 AM

டெல்லியில் கேதார்நாத் கோயில் கட்ட எதிர்ப்பு: உத்தராகண்டில் துறவிகள், மடாதிபதிகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: உத்தராகண்டில் சார்தாம் என்ற பெயரில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் உள்ளன.

இதில் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் இருப்பது போல் டெல்லியில் ஒரு சிவன் கோயிலை அதே பெயரில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கேதார்நாத் தாம் அறக்கட்டளை, டெல்லி என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதன் சார்பில் டெல்லி, புராரி பகுதியில் கடந்த ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், கேதார்நாத்தில் இருப்பது போல் மற்றொரு கோயில் கட்ட எதிர்ப்புகள் வலுக்கின்றன. இதற்காக ‘கேதார் சபா’ எனும் பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் கேதார்நாத் கோயில் முன் மடாதிபதிகளும், துறவிகளும் கடந்த நான்கு நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கேதார் சபாவின் செய்தித்தொடர்பாளர் பங்கஜ் சுக்லா கூறும்போது, “இந்தக் கோயில் கட்டுவதன் மூலம், கேதார்நாத்தின் முக்கியத்துவம் குறைந்து விடும். கேதார்நாத் சிவனுக்கான அபிஷேக சராணா அமிர்தம் டெல்லியில் விநியோகிக்கப்படும் என்று கேதார்நாத் தாம் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுவது தவறு. இந்த செயல் சனாதனத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது. சராணா அமிர்தம் என்பது கேதார்நாத்தில் மட்டுமே கிடைப்பது” என்றார்.

கேதார் சபாவின் தலைவர் ராஜ்குமார் திவாரி கூறும்போது, “இந்த வருடம் கேதார்நாத்துக்கு அதிகமாக வந்த பக்தர்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. கூடுதலான பக்தர்களை மானஸ் கண்ட் யாத்ராவுக்கு திருப்பி விட்டனர்.

இது, அரசின் ஒரு பிரிவினர் சார்தாம் யாத்திரையை குறைத்து மதிப்பிடுவதை காட்டுகிறது. கேதார்நாத்தின் புனிதத்துவ மதிப்பீட்டை குறைக்காமல் இருப்பது உள்ளிட்ட சில கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

இதுகுறித்து டெல்லி, கேதார்நாத் தாம் அறக்கட்டளையின் தலைவர் சுரேந்திரா ரவுத்தாலா கூறும்போது, “கடும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் கோயில் வருடத்தில் சுமார் ஐந்து மாதங்கள் மூடப்படுகிறது. இதனால் உத்தராகண்டின் கேதார்நாத்திலிருந்து புனிதப் பாறையை கொண்டுவந்து டெல்லியில் அமையும் கோயில் அனைத்து நாட்களும் திறந்திருக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x