Published : 16 Jul 2024 06:41 PM
Last Updated : 16 Jul 2024 06:41 PM

கன்னடர்களுக்கு கட்டாய வேலைக்கான இடஒதுக்கீடு மசோதா - கர்நாடக அரசு ஒப்புதல் | HTT Explainer

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50 சதவீத நிர்வாக பணிகளிலும், 75 சதவீதம் நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா 2024 எனப் பெயரிடப்பட்ட அந்த மசோதாவுக்கு திங்கள்கிழமை (ஜூலை 15) அன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதைய சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50 சதவீத நிர்வாக பணிகளிலும், 75 சதவீதம் நிர்வாக அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும். கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கோடு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சில வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன.

தகுதியான நபர்கள் யார்?: கர்நாடக அரசின் அறிவிப்பின்படி, "கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர், 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும், கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் திறன் கொண்டவர் இதற்கான தகுதியான நபர்" என்று இந்த மசோதா வரையறுக்கிறது. மேலும், விண்ணப்பதாரர்கள் கன்னடத்தை ஒரு மொழியாகக் கொண்ட மேல்நிலைப் பள்ளிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், கர்நாடக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நோடல் ஏஜென்சியால் குறிப்பிடப்பட்ட கன்னட புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நிபந்தனையாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும், தகுதியான அல்லது பொருத்தமான உள்ளூர் நபர்கள் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், அரசாங்கத்துடன் இணைந்து, உள்ளூர் நபர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அந்த மசோதா கூறுகிறது.

இந்த சட்டத்தில் இருந்து நிறுவனங்கள் தளர்வு பெற விண்ணப்பிக்க முடியும். எனினும், அந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம் உள்ளூர் நபர்கள் நிர்வாக பதவிகளில் 25 சதவீதம் மற்றும் மற்ற பிரிவுகளில் உள்ள பதவிகளில் 50 சதவீத்துக்கும் குறைவாக இருக்கக்கூடாது எனச் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனங்கள் இந்த மசோதாவை ஏற்கத் தவறினால் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடாகாவில் அரசு மற்றும் தனியார் துறை வேலைகளில் கன்னடர்களுக்கு 100% வேலை இடஒதுக்கீடு வேண்டும் என கன்னட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. மேலும் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு பரிந்துரைக்கும் சரோஜினி மகிஷி அறிக்கையை உடனடியாக அமல்படுத்தக் கோரி பேரணிகள் நடத்தின. இந்த போராட்டங்களின் பின்னணியில் தற்போது இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x