Published : 16 Jul 2024 01:22 PM
Last Updated : 16 Jul 2024 01:22 PM
பெங்களூரு: “தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டிடம் என்னுடைய ஒரே கோரிக்கை, மேகேதாட்டு நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.” என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டிடம் என்னுடைய ஒரே கோரிக்கை, மேகேதாட்டு நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இந்த அணையால் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரண்டும் சரிசமமாக பலனடையும். இரண்டு மாநிலங்களின் செழிப்புக்கும் இந்த நடவடிக்கை அவசியம்.
எனவே, அனைத்தையும் ஓரம்கட்டி வைத்துவிட்டு, மேகேதாட்டு நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு பச்சைக் கொடி காட்டி, பிராந்தியத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிப்பதற்கு பங்களிக்கும் என்று நம்புகிறேன்.” என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
We have no objection to Tamil Nadu leaders holding an all party meeting, but my only request to Tamil Nadu is to allow the construction of #Mekedatu Balancing Reservoir.
This reservoir will benefit both Karnataka and Tamil Nadu, equally. This step is needed for the prosperity of…— DK Shivakumar (@DKShivakumar) July 16, 2024
காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பார்கள் என்று அறிவித்தார்.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.50 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செயலர் மணிவாசகம், சட்டதுறை வல்லுநர்கள், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராமச்சந்திரன், மு.வீரபாண்டியன், விசிக சார்பில் தொல்.திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.எச்ஜாவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி.வேல்முருகன், கொமதேக சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். சில முக்கியத் தீர்மானங்களும் இதில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் கர்நாடக அமைச்சரின் இந்த ட்வீட் கவனம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT