Published : 02 Aug 2014 10:00 AM
Last Updated : 02 Aug 2014 10:00 AM

65 பேரை பலி வாங்கிய மீரட் தீ விபத்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷன்

மீரட் தீவிபத்து குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சின்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் மின்னணு சாதனப் பொருட்கள் சந்தை நடந்தது. அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 65 பேர் உயிரிழந்தனர். இதில் தனது மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேரை இழந்த சஞ்சய் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “இவ்வளவு பெரிய தீ விபத்து நடந்தும் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட எந்த அதிகாரி மீதும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விபத்து குறித்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கோபால கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மீரட் தீ விபத்து குறித்து புலன் விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற எஸ்.பி.சின்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இக்குழு அடுத்த ஆண்டு ஜனவரி 31-க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ரூ.5 லட்சம், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 உடனடியாக வழங்குமாறு உத்தர பிரதேச மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தொகையை மீரட் மாவட்ட நீதிபதி பெயரில் வைப்புத் தொகையாக செலுத்தும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x