Published : 15 Jul 2024 05:23 AM
Last Updated : 15 Jul 2024 05:23 AM
புதுடெல்லி: கார்கில் வெற்றி தின வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, உயிர்நீத்த வீரர்களுக்கு விமானப்படை அஞ்சலி செலுத்தியது.
காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் மலை உச்சிகளில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1999-ம் ஆண்டு ரகசியமாக ஊடுருவி முகாம் அமைத்தது. மலை உச்சியில் முகாமிட்டிருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த முதலில் விமானப்படையின் உதவி நாடப்பட்டது.
கார்கில் போரில் விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் 5000 முறை பறந்து சென்று தாக்குதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அதனால் கார்கில் போரில் விமானப்படையின் பங்களிப்பும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. விமானப்படை மேற்கொண்ட ‘ஆபரேஷன் சேஃப்ட்சாகர்’ நடவடிக்கையில் , உத்தரப் பிரதேசத்தில் உள்ள சரஸ்வா விமானப்படை தளத்தில் உள்ள 152-வது ஹெலிகாப்டர் பிரிவும் முக்கிய பங்காற்றியது.
1999-ம் ஆண்டு மே 28-ம் தேதி, கார்கில் பகுதியில் டோலோலிங்க் என்ற இடத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த ஸ்குவாடர்ன் லீடர் பண்டிர், பிளைட் லெப்டினன்ட் முகிலன், சார்ஜன்ட்கள் பிரசாத், சாகு ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்றனர். எதிரி முகாம் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி விட்டு திரும்பும்போது, ஏவுகணை தாக்குதலில் ஹெலிகாப்டர் சிக்கியது.
இதில் விமனாப்படை ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 பைலட்டுகள் மற்றும் 2 வீரர்களும் உயிரிழந்தனர். இவர்களின் இந்த வீரதீர செயலுக்காக, வாயு சேனா பதக்கங்கள் அவர்கள் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.
விமானப்படையின் தொடர் தாக்குதல்கள், தரைப்படை முன்னேறிச் செல்லவும், கார்கில் பகுதியில் டைகர் மலை உட்பட பலபகுதிகளை மீட்கவும் வழிவகுத்தது. இறுதியாக கார்கில் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டு கார்கில் போரில் வெற்றிபெற்றதாக 1999-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் வெற்றிதினமாக கொண்டாப்பட்டு வருகிறது.
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், கார்கில் வெற்றி தினத்தின் 25-ம் ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காகவும் உத்தர பிரதேசம் சகாரன்பூரில் உள்ள சரஸ்வா விமானப்படை தளத்தில் கார்கில் வெற்றி தினத்தின் வெள்ளி விழா கடந்த 12-ம் தேதி முதல் வரும் 26-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக பல நிகழ்ச்சிகளுக்கு விமானப்படை ஏற்பாடு செய்துள்ளது.
விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்தரி, சரஸ்வா விமானப்படை தளத்தின் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கடந்த சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார். உயிர்நீத்த வீரர்களின் உறவினர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
சாகச நிகழ்ச்சிகள்: விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜாக்குவார், சுகோய்-30, ரபேல் போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றன. விமானப்படையின் ஆகாஸ் கங்கா குழுவினரும், வானிலிருந்து பாராசூட் மூலம் குதித்து சாகசத்தில் ஈடுபட்டனர்.
விமானப்படையின் பல வகை ஹெலிகாப்டர்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன. விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விமானப்படை பேண்ட் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி நடத்தினர்.
விமானப்படை நடத்திய கார்கில் வெற்றி தின வெள்ளி விழா நிகழ்ச்சிகளை பள்ளிக் குழந்தைகள், உள்ளூர் மக்கள், 5,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT