Published : 15 Jul 2024 06:45 AM
Last Updated : 15 Jul 2024 06:45 AM

ஒடிசாவில் 46 ஆண்டுகளுக்கு பிறகு ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு

புரி: ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையான ரத்ன பந்தர் 46 ஆண்டுகளுக்கு பின் நேற்று திறக்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத்ன பந்தர் என்ற பொக்கிஷ அறைஉள்ளது. அதில் புரி ஜெகந்நாதருக்காக மன்னர்கள் நன்கொடையாக அளித்த தங்கம், வைரம்,வைடூரிய நகைகள், கிரீடங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறை கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை.

இங்கு தொல்பொருள் ஆய்வுத்துறை புனரமைப்பு பணி மேற்கொள்வதற்காக, இந்த ரத்ன பந்தர் அறையை நேற்று திறக்க ஒடிசா அரசு அனுமதி வழங்கியது. இதுகுறித்து ஜெகந்நாதர் கோயிலின் நிர்வாக அதிகாரி அரவிந்த பதி கூறியதாவது:

ரத்ன பந்தர் அறையை திறப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளுக்கு (எஸ்ஓபி) ஒடிசா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி பல்வேறு சேவா குழுக்கள், தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள்,  கஜபதி மகாராஜின் பிரதிநிதிகள் முன்னிலையில் ரத்ன பந்தர் அறை திறக்கப்படுகிறது. அப்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ எடுக்கப்படும். இது பொதுவில் வெளியிடப்படாது. ரகசியமாக இருக்கும்.

ரத்ன பந்தர் அறையை திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களை ஆய்வு செய்யும் வழிகாட்டுதலில் 3 நடைமுறைகள் உள்ளன. ரத்ன பந்தர் அறையில் இரு அறைகள் உள்ளன. அதற்குள் பெட்டக அறை உள்ளது. ரத்ன பந்தர் அறை திறப்பு, அதன் பின்பு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எளிதாக இருக்க மகாபிரபுவின் ஆசிர்வாதத்தை நாங்கள் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

புரி எஸ்.பி பினாக் மிஸ்ரா கூறுகையில், ‘‘ ரத்ன பந்தர் அறை திறப்பு நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். இதன்காரணமாக கோயிலில் தினந்தோறும் நடைபெறும் பூஜைகளில் எந்த பாதிப்பும் இருக்காது. பணியில் உள்ள ஊழியர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்’’ என்றார்.

ஆய்வுக்குழு உறுப்பினரும், மணல் சிற்ப கலைஞருமான சுதர்ஸன் பட்நாயக் கூறுகையில், ‘‘ உயர்நீதிமன்ற உத்தரவுக்குப்பின், புனரமைப்பு பணி மேற்கொள்ள ரத்னபந்தர் அறையை விரைவில் ஒப்படைக்கும்படி கோயில் நிர்வாககுழுவுக்கு தொல்பொருள் ஆய்வுத்துறை கடிதம் எழுதியது. இதுதொடர்பாக ஜெகந்நாதர் கோயில்கமிட்டி தலைவருக்கு நான்கடிதம் எழுதினேன் புனரமைப்புபணி மேற்கொள்வதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து, ரத்னபந்தரை திறப்பதற்கான வழிமுறைகளை ஒடிசா அரசு தயாரித்தது’’ என்றார்.

இந்த ரத்ன பந்தர் அறை பற்றிபல கட்டுக் கதைகளும் கூறப்படுகின்றன. புரி ஜெகந்நாதர் ரத்னபந்தர் அறையில் உள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க நாக பாம்புகள் இருப்பதாகவும், பக்தர்கள் கூறினர். பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதாலும், கற்கோயிலுக்குள் பல ஓட்டைகள் இருப்பதால் அங்கு பாம்புகள் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது என கூறப்படுகிறது.

இதனால் ரத்னபந்தர் அறையை திறக்கும்போது பாம்புகள் தென்பட்டால் அதை பிடிப்பதற்கு பாம்பாட்டிகளும் நேற்று வரவழைக்கப்பட்டிருந்தனர். பொக்கிஷங்களை எடுத்து வைப்பதற்காக சிறப்பு பெட்டிகளும் நேற்று கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x