Published : 14 Jul 2024 07:17 PM
Last Updated : 14 Jul 2024 07:17 PM

தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறப்பு - சித்தராமையா அறிவிப்பு

கோப்புப்படம்

பெங்களூரு: தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லியில் கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், “தமிழகத்துக்கு கர்நாடக அரசு 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ம் தேதிக்குள் திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 11,500 கன அடி நீர் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா அவசரமாக அமைச்சரவையை கூட்டி, தமிழகத்துக்கு நீரை திறந்துவிட முடியாது என தெரிவித்தார். மேலும் காவிரி ஒழுங்காற்று குழுவின் முடிவை எதிர்த்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடப் போவதாகவும் தெரிவித்தார்.

இதன் அடுத்தகட்டமாக, காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுப்பதற்காக சித்தராமையா தலைமையில் அம்மாநில அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டம் பெங்களூருவில் இன்று (ஞாயிறு) நடந்தது. துணை முதல்வரும் நீர் பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், பாஜக, மஜத, கர்நாடக மாநில விவசாய சங்கம், கன்னட அமைப்பினர், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியை சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், கூட்டத்தின் இறுதியில், ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி, தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீரை திறந்துவிடுவதுக்கு பதிலாக, தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, "தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 8,000 கனஅடி தண்ணீர் திறந்து விடலாம் என்றும், மழை பெய்தால் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வோம் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது" என்றார்.

மேலும், தமிழகத்துக்கு நாளை முதல் 8,000 கன அடி காவிரி நீர் திறக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x