Published : 14 Jul 2024 04:24 AM
Last Updated : 14 Jul 2024 04:24 AM

வெளிநாடு செல்லும் மகனை வழியனுப்ப கைதிக்கு பரோல்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

மும்பை: உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மகனை வழியனுப்ப கைதி ஒருவருக்கு பரோல் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக் ஸ்ரீவத்சவ். கொலை வழக்கில் கைதான இவருக்கு 2012-ல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. தற்போது அவர் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் அவர் தனக்கு பரோல் வழங்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர் கூறும்போது, “என் மகன் ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலச் செல்கிறார். அவரை வழியனுப்புவதற்காகவும், அவருக்கான படிப்புச் செலவுகள், இதரச் செலவுகளுக்கு ரூ.36 லட்சம்ரொக்கம் ஏற்பாடு செய்வதற்காகவும் என்னை பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த மனு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதி டாங்க்ரே, மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “குடும்பத்தினர், நெருங்கிய உறவினரின் இறப்பு போன்ற அவசரமான காரியங்களுக்கு மட்டுமே கைதி ஒருவருக்கு பரோல் வழங்க முடியும். வெளிநாட்டுக்குச் செல்லும் மகனை வழியனுப்புதல், பணம் ஏற்பாடு செய்தல் போன்ற காரணங்களைக் காட்டி பரோல் வழங்க இயலாது’’ என்றார்.

விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் கூறும்போது, “துக்ககரமான நிகழ்ச்சிகளுக்குச் செல்ல கைதிக்கு பரோல் வழங்கும்போது, ஏன் மகிழ்ச்சியான விஷயங்களுக்கு செல்ல பரோல் வழங்கக்கூடாது. விவேக் ஸ்ரீவத்சவ் பரோலில் செல்ல நாங்கள் அனுமதி வழங்குகிறோம்.

தண்டனைக் கைதிகள் வெளியுலகத்துடன் தொடர்பில் இருக்கவும், அவர்கள் சிறையில் இருந்தாலும், குற்றவாளி ஒருவரின் மகன், கணவன், தந்தை அல்லது சகோதரனாகத் தொடர்வதைப் போல அவர்களது குடும்ப விவ காரங்களுக்கான பணத்தை ஏற்பாடு செய்யவும், குறுகிய காலத்துக்கு நிபந்தனையுடன் கூடியபரோலில் செல்லவும் அனுமதிக்கிறோம். மனிதாபிமான அணுகுமுறையில் குற்றவாளிகளுக்கு இந்த நிபந்தனை பரோலை அனு மதிக்கிறோம்.

துக்கம் என்பது ஓர் உணர்ச்சி.அதைப் போலவே மகிழ்ச்சியும் ஓர்உணர்ச்சிதான். துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள பரோல் வழங்கப்படுமானால், மகிழ்ச்சியான சந்தர்ப்பம் அல்லது மகிழ்ச்சியான தருணங்களில் அந்த கைதி பரோலில் செல்ல ஏன் அனுமதிக்கக் கூடாது?’’ இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். விவேக் ஸ்ரீவத்சவ் 10 நாள் நிபந்தனை பரோலில் செல்ல நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x