Published : 13 Jul 2024 06:38 PM
Last Updated : 13 Jul 2024 06:38 PM
ஸ்ரீநகர்: நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த சட்டப்பேரவையைாக விளங்கிய ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையிடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிட்டது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ஜம்மு காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தி இருக்கிறது. இதன்மூலம், நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த சட்டப்பேரவையைாக விளங்கிய ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையிடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு நகராட்சியாக மாற்ற விரும்புகிறது. அதைத்தான் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாஜக ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. இதன் காரணமாகவே, ஜம்மு காஷ்மீரில் நாளை எந்த அரசு அமைந்தாலும், அந்த அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பணியாளர்கள் யாரையும் அதனால் இடமாற்றம் செய்ய முடியாது. யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் அரசுக்கு இருக்க வேண்டிய அந்த அதிகாரத்தைப் பறித்து, நீங்கள் அதனை தலைமைச் செயலாளர் மற்றும் துணைநிலை ஆளுநரிடம் கொடுக்க விரும்புகிறீர்கள். துணைநிலை ஆளுநர் என்பவர் மாநிலத்துக்கு வெளியே இருந்து வருபவர். அவருக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் தெரிந்திருக்காது. இங்குள்ள மக்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், ஏன் இங்குள்ளவர்களை வைத்திருக்கிறீர்கள்? கஷ்மீரில் எங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டீர்கள்" என குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் முடிவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா, "ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டது என்பதற்கான மற்றுமொரு அறிகுறி வந்துவிட்டது. இதனால்தான், ஜம்மு காஷ்மீருக்கு முழுமையான, நீர்த்துப்போகாத மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படுவதற்கான காலக்கெடு தேர்தலுக்கு முன் நிர்ணயிக்கப்பட உறுதியான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் தனக்கான பியூனை நியமிக்க, துணைநிலை ஆளுநரிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலை இருக்கக்கூடாது. ஜம்மு காஷ்மீர் மக்கள், தகுதி மிக்கவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019-ன் பிரிவு 55ன் கீழ் திருத்தப்பட்ட விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. திருத்தப்பட்ட இந்த விதிகளின்படி, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அட்வகேட் ஜெனரல், சட்ட அதிகாரிகள் (நீதிமன்ற நடவடிக்கைகளில் அட்வகேட்-ஜெனரலுக்கு உதவக்கூடியர்கள்) ஆகியோரை நியமிப்பதற்கு முன், சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை, தலைமைச் செயலாளர் மூலம் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், சிறைச்சாலைகள், வழக்கு விசாரணை இயக்குநரகம் மற்றும் தடய அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் துணைநிலை ஆளுநரிடன் ஒப்புதலைப் பெற்றே நடக்க வேண்டும்.
— Mehbooba Mufti (@MehboobaMufti) July 13, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT