Published : 13 Jul 2024 04:50 PM
Last Updated : 13 Jul 2024 04:50 PM
புதுடெல்லி: கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்ட நபர் மீது டெல்லி போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் 26-ஆவது பஞ்சாப் படைப் பிரிவில் சியாச்சின் பகுதியில் மருத்துவ அதிகாரியாக இருந்தவர் கேப்டன் அன்ஷுமான் சிங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சியாச்சின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட வீரர்களையும், மருத்துவ உபகரணங்களையும் மீட்டபோது தீயில் சிக்கி வீரமரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல், உத்திரப் பிரதேச மாநிலத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதன்பின், கேப்டன் அன்ஷுமான் சிங்கின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவரது மனைவி ஸ்மிருதி சிங்குக்கு "கீர்த்தி சக்ரா" விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வழங்கினார்.
இந்நிலையில், கேப்டன் அன்ஷுமான் சிங்கின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் ஊடகம் ஒன்றுக்கு அளித்தனர். இதையடுத்து, டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்மிருதி சிங் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை பதிவு செய்தார்.
இவ்விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் டெல்லி காவல் துறைக்கு புகாரளித்து இருந்தது. அதில், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து, விரைவில் அவரை கைது செய்ய வேண்டும். அடுத்த மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையை டெல்லி காவல் துறையிடம் தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்’ என்றும் கோரியிருந்தது. இதன் தொடர்ச்சியாக டெல்லியைச் சேர்ந்த அந்த நபரின் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT