Published : 13 Jul 2024 04:36 PM
Last Updated : 13 Jul 2024 04:36 PM

சோனியா காந்தியுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது அவரது மனைவி கல்பனா சோரனும் உடன் இருந்தார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், "இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்பின்போது, ஜார்க்கண்ட்டில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பேசவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நான் சோனியா காந்தியை சந்திக்கவில்லை. அதோடு, நான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு சோனியா காந்தியை சந்திக்கவில்லை. எனவே, அவரை சந்தித்தேன்.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான விவாதங்கள் தொடரும். இந்தியர்கள் மிகவும் உணர்வுபூர்வமானவர்கள், சகிப்புத்தன்மை மிக்கவர்கள். எவ்வளவு முடியுமோ அதுவரை அவர்கள் பொறுமை காப்பார்கள். அதன்பிறகு, அவர்கள் வாக்கு மூலம் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விரைவில் ஜாமின் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, கடந்த ஜனவரி 31ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரனுக்கு ஜூன் 28-ம் தேதி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் குற்றவாளி அல்ல என்று நம்புவதற்கான காரணங்கள் இருப்பதாக கூறி அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம், முதல்வர் சம்பய் சோரன் இல்லத்தில் ஜூலை 3-ம் தேதி நடைபெற்றது. அதில், ஹேமந்த் சோரனை மீண்டும் சட்டப்பேரவை கட்சித் தலைவராக நியமிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து விலகிய சம்பய் சோரன், மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதையடுத்து, உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரினார். ஆளுநரின் அழைப்பை அடுத்து ஜூலை 4-ம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராக 3-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஹேமந்த் சோரனுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்தன. இதன் காரணமாக, ஜூலை 8-ம் தேதி ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x