Published : 13 Jul 2024 01:51 PM
Last Updated : 13 Jul 2024 01:51 PM
ஹைதராபாத்: பாரத் ராஷ்ட்ர சமிதி எம்எல்ஏ அரிகேபுடி காந்தி, முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன்மூலம், 9 பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
தெலங்கானாவின் செரிலிங்கம்பள்ளி தொகுதி எம்எல்ஏ அரிகேபுடி காந்தி, எதிர்பார்த்தபடி காங்கிரஸ் கட்சியில் இன்று (ஜூலை 13) இணைந்தார். ஹைதராபாத்தில் உள்ள முதல்வர் இல்லத்தில், முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார். அவரோடு, பெருநகர ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் பிஆர்எஸ் கவுன்சிலர்களான செரிலிங்கம்பள்ளி கவுன்சிலர் நாகேந்தர் யாதவ், மியாபூர் கவுன்சிலர் உப்பலாபதி ஸ்ரீகாந்த், சந்திராநகர் கவுன்சிலர் மஞ்சுளா ரகுநாத் ரெட்டி, ஹைதர்நகர் கவுன்சிலர் நார்னே ஸ்ரீனிவாஸ் ஆகிய 4 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
முதல்வர் ரேவந்த் ரெட்டியும், அரிகேபுடி காந்தியும் நீண்ட கால நண்பர்கள். தெலுங்கானா உருவான பிறகு 2014 சட்டமன்றத் தேர்தலில், இருவரும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிகேபுடி காந்தி, உடனடியாக பராத் ராஷ்ட்ர சமிதிக்கு (அப்போது தெலங்கானா ராஷ்ட்ர சமிதி) மாறினார். எனினும், தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரேவந்த் ரெட்டி பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார்.
ராஜேந்திரநகர் எம்.எல்.ஏ பிரகாஷ் கவுட், சமீபத்தில் பாரத் ராஷ்ட்ர சமிதியில் இருந்து வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். அவர் இணைந்த ஒருசில நாட்களில், ஒன்பதாவது பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ அரிகேபுடி காந்தி காங்கிரசில் இணைந்துள்ளார். மேலும் சில பிஆர்எஸ் எம்எல்ஏக்கள், அங்கிருந்து வெளியேற தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்வர் ரேவந்த் ரெட்டி நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தெலங்கானா காங்கிரஸ் அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தும் நோக்கில், பிஆர்எஸ் தலைவர் கே. சந்திரசேகர ராவ் பாதயாத்திரை அல்லது பேருந்து யாத்திரையை விரைவாக தொடங்க வேண்டும் என்றும் அப்போதுதான் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டத்தை தடுக்க முடியும் என்றும் அக்கட்சியினர் கருதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT