Published : 13 Jul 2024 05:42 AM
Last Updated : 13 Jul 2024 05:42 AM

கார்கில் போரில் டைகர் மலையில் விமானப்படை நடத்திய லேசர் குண்டு தாக்குதலின் வீடியோ வெளியீடு

கார்கில் பகுதியில் உள்ள டைகர் மலை உச்சியில்  பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது,  இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானம் கடந்த 1999-ம் ஆண்டு ஜுன் 27-ம் தேதி இரவு நேரத்தில் லேசர் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி.

புதுடெல்லி: கார்கில் போரில் டைகர் மலையில், பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானம் கடந்த 1999-ம் ஆண்டு ஜுன் 27-ம் தேதி இரவு நேரத்தில் லேசர் குண்டு தாக்குதல் நடத்திய முதல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

காஷ்மீரின் லடாக் பகுதியில் அமைந்துள்ளது கார்கில். இங்குள்ள டைகர் மலையின் உச்சியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1999-ம் ஆண்டு ரகசியமாக சென்று முகாம் அமைத்தது. பாறை மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து, அங்கிருந்து தாழ்வான பகுதியில் உள்ள இந்தியப் படைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

டைகர் மலை உச்சியை கைப்பற்றிய பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது, தாழ்வான பகுதியில் இருந்து தரைப்படை தாக்குதல் நடத்தினால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும். இதனால் விமானப்படையின் போர் விமானத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மிராஜ் 2000 ரக விமானத்தில் இருந்து பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது லேசர் குண்டு வீச முடிவு செய்யப்பட்டது.

கடந்த 1999- ஆண்டு ஜுன் 27-ம் தேதி அதிகாலை 2 மணியளவில், இந்திய விமானப்படையின் மிராஜ் ரக போர் விமானம் இந்த துல்லிய தாக்குதலை நடத்தின. அதன்பின்பு ஜுன் 30-ம் தேதியும் மிராஜ் விமானங்கள் முந்தோ தாலோ, மாஸ்கோஷ் பள்ளத்தாக்கு பகுதியில் இரவு நேர தாக்குதல் நடத்தி பாக்., ராணுவ முகாம்களை அழித்தன.

இதற்கு பின்பே இந்திய ராணுவத்தின் தரைப்படை 1999 ஜூலை 3-ம் தேதி முன்னேறிச் சென்று டைகர் மலையை கைப்பற்றியது. இந்த லேசர் குண்டு தாக்குதலின் வீடியோ காட்சி தற்போது முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குலை விமானப்படையின் அப்போதைய பைலட்டுகள் விங் கமாண்டர் ரகுநாத் நம்பியார், ஸ்குவார்டர்ன் லீடர் பட்நாயக் ஆகியோர் நடத்தினார். அதன்பின் இவர்கள் விமானப்படையின் கிழக்கு மற்றும் மேற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரிகளாக ஏர் மார்ஷல் அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்றனர்.

ஏர் மார்ஷல் தகவல்: இந்த தாக்குதல் குறித்து ஏர் மார்ஷல் பட்நாயக் (ஓய்வு) அளித்த பேட்டியில் கூறியதாவது:
கார்கில் பகுதியில் உள்ள டைகர் மலை உச்சியில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் ராணுவ முகாமை அழித்தால்தான், அங்கு தரைப்படை எளிதாக முன்னேற முடியும் என்பதை உணர்ந்தோம். அதனால் கடந்த 1999-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி தாக்குதல் நடத்த முயன்றோம். ஆனால் வானிலை சாதகமாக இல்லை. அதனால் மறுநாள் அதிகாலை 2 மணிக்கு டைகர் மலையில் வெற்றிகரமாக இந்த தாக்குதலை துல்லியமாக நடத்தினோம்’’ என்றார்.

அவருடன் மிராஜ் 2000 விமானத்தில் பயணித்த பைலட் ஏர்மார்ஷல் ரகுநாத் நம்பியார் (ஓய்வு) கூறுகையில், ‘‘டைகர் மலையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாமிலிருந்து 28 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து லேசர் குண்டை வீசும் நடவடிக்கையை தொடங்கினேன். லைட்னிங் பாட் மூலம் இலக்கு தூரத்தை கணக்கிட்டோம். பாகிஸ்தான் ராணுவ முகாமை நெருங்கியதும், லேசர் குண்டு வீசும் பட்டனை அழுத்தினேன்.

600 கிலோ லேசர் குண்டு: விமானத்தில் இருந்து 600 கிலோ லேசர் குண்டு வெளியேறியது. அந்த கடைசி 30 வினாடிகள் மிகவும் பதட்டமாக இருந்தது. இலக்கு துல்லியமாக தாக்கப்பட்ட குண்டு சத்தம் கேட்டபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்து, அந்த வெற்றியை விமானப்படையினருக்கு ரேடியோ அழைப்பு மூலம் தெரிவித்து மகிழ்ந்தோம்’’ என்றார்.

மிராஜ் 2000 ரக போர் விமானத்தில் பயன்படுத்தப்பட்ட லேசர் குண்டுகள் மற்றும் கருவிகள் இஸ்ரேல் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x