Published : 13 Jul 2024 05:34 AM
Last Updated : 13 Jul 2024 05:34 AM
புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தனர். இதே ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ தனியாக வழக்கு பதிவு செய்து கேஜ்ரிவாலை கைது செய்தது.
இந்த சூழலில், அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
அர்விந்த் கேஜ்ரிவால் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். எனவே, அவரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடுகிறோம். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். எனவே, முதல்வர் பதவியில் நீடிப்பதா, வேண்டாமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
இடைக்கால ஜாமீனில் வெளியே இருக்கும்போது, முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ கேஜ்ரிவால் செல்ல கூடாது. எந்தவொருஅரசு கோப்புகளிலும் கையெழுத்திட கூடாது. மதுபான கொள்கை ஊழல் வழக்கு குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க கூடாது. வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை சந்திக்கவோ, பேசவோ கூடாது.
இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். புதிய அமர்வு, கேஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனில் மாற்றங்களை செய்யலாம். புதிய அமர்வு விரும்பினால் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கலாம் அல்லது ரத்து செய்யலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பாஜக வலியுறுத்தல்: பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பன்சூரி ஸ்வராஜ் எம்.பி. கூறியதாவது: மக்களவை தேர்தலின்போது, கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. தற்போதும் அதே நடைமுறையில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால், கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போதும் கேஜ்ரிவால் குற்றவாளிதான். அவர்முதல்வர் பதவியில் இருந்து விலகவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹவாலா முறையில் லஞ்சம்: வழக்கு குறித்து சிபிஐ, அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வழக்கறிஞரும்,இடைத் தரகருமான வினோத் சவுகான் என்பவரை கைது செய்துள்ளோம். அவரும், டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும் வாட்ஸ்அப் மூலம் நடத்திய உரையாடல்களை குற்றப்பத்திரிகையில் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளோம்.
மதுபான கடை உரிமங்களில் ஆதாயம் அடைந்த சவுத் குரூப் சார்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100கோடி லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.45 கோடி ஹவாலா முறையில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணத்தை கடந்த 2022-ம்ஆண்டு கோவா சட்டப்பேரவைத்தேர்தலில் ஆம் ஆத்மி பயன்படுத்தியது. இதற்கான ஆதாரங்களை குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளோம்.
எங்கள் தரப்பு வாதங்களை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகு எங்கள் தரப்பு வாதங்களை வலுவாக எடுத்துரைப்போம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிபிஐ வழக்கில் காவல் ஜூலை 25 வரை நீட்டிப்பு: கேஜ்ரிவால் வெளியே வருவதில் சிக்கல்
மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 25-ம் தேதி வரை நீட்டித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத் துறை வழக்கில் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டாலும், சிபிஐ வழக்கில் அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி திஹார் சிறையில் இருந்து அவர் வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது. அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறும்போது, “அமலாக்கத் துறை வழக்குபோல, சிபிஐ வழக்கிலும் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT