Published : 13 Jul 2024 06:44 AM
Last Updated : 13 Jul 2024 06:44 AM
பெங்களூரு: கர்நாடகாவில் 11 அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.45.14 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், தங்க நகைகள், சொத்துகளின் ஆவணங்கள் சிக்கின.
கர்நாடக மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் ஊழலில் ஈடுபட்டதாக லோக் ஆயுக்தா போலீஸாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பெலகாவி உள்ளிட்ட இடங்களில் இந்நாள், முன்னாள் அதிகாரிகள் 11 பேருக்கு சொந்தமான 56 இடங்களில் சோதனை நடத்தினர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த இந்த சோதனையில் 120 போலீஸார் பங்கேற்றனர்.
இதுகுறித்து லோக் ஆயுக்தா வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: பெங்களூரு மாநகராட்சியின் கெங்கேரி மண்டல வருவாய் அதிகாரி பசவராஜ் மாகி, பெங்களூரு நீர்ப்பாசனத் துறை முதன்மை பொறியாளர் ரவீந்திரா, தார்வாட் அரசு திட்டங்களின் இயக்குநர் சேகர் கவுடா, பெலகாவி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மஹாதேவ் பன்னூர், கோலார் வட்டாட்சியர் விஜியண்ணா, மைசூருபொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகேஷ் உள்ளிட்ட 11 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் அதிகபட்சமாக மஹாதேவ் பன்னூருவின் வீட்டில்இருந்து ரூ. 9.75 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க, வைர நகைகள், சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உமேஷ், ரவீந்திரா, சிவராஜ் கவுடா ஆகியோரின் வீடுகளில் இருந்து தலா ரூ.5 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க நகைகள், சொத்துகளின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
11 அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து, கணக்கில் வராத ரூ. 45.14 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க நகைகள், சொத்துகளின் ஆவணங்கள் சிக்கின. இதை யடுத்து 11 பேரின் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT