Published : 13 Jul 2024 05:30 AM
Last Updated : 13 Jul 2024 05:30 AM
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் அன்னபிரசாதத்தின் தரத்தை அதிகரிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. தென்னிந்திய சமையல் கலைவல்லுனர்களின் ஆலோசனைப்படி சுவை, தரத்தை உயர்த்தவும், அதிநவீன கருவிகளையும் பொருத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மறைந்த என்.டி. ராமாராவின் ஆட்சிக் காலத்தில் முதலில்தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு திருமலையில் அன்னதானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, பக்தர்கள் காணிக்கைசெலுத்தும் பணத்தை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் வரும் வட்டியில் இத்திட்டத்தை நடத்த என்.டி.ராமாராவ் ஆலோசனை வழங்கினார். அதன்படி தேவஸ்தானம் கடந்த 1983 முதல் தொடர்ந்து 41 வருடங்களாக பக்தர்களுக்கு திருமலை மற்றும் திருப்பதியில் அன்னதானம் வழங்கி வருகிறது. இது தற்போது, உலகிலேயே எங்கும் இல்லாத வகையில் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டமாக மாறியுள்ளது. இதற்காக தினமும் காய்கறிகள் வேலூர், சென்னை, விழுப்புரம் என தமிழகத்தில் பலஇடங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் இருந்தும் பக்தர்களால் இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது. தரமான அரிசி, பருப்பு, காய்கறி , எண்ணெய் போன்றவை உபயோகப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், புதிதாக வந்ததேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ், அன்னதானத்தை ஆய்வு செய்து, அதன் தரத்தை மேம்படுத்த வேண்டுமென விரும்பினார். உடனே அரிசியின் தரம் உட்பட பலவற்றில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். மேலும், தினமும் ஒரே மாதிரியான சாப்பாடுஇல்லாமல், விதவிதமான சுவையுடன் பல தரப்பட்ட சுத்தமான உணவை பக்தர்களுக்கு பரிமாற வேண்டும் என நினைத்தார்.
இதற்காக, தென்னிந்திய சமையல் கலை நிபுணர்கள் சங்கத்தை வரவழைத்து ஆலோசனைகளை கேட்டறிந்தார்.
இதுகுறித்து சியாமள ராவ் கூறுகையில், ‘‘ஒரே நாளில் சுமார்2 லட்சம் பேருக்கு 3 வேளையும்சமையல் செய்து பரிமாறுவது என்பது சுலபமான காரியம் அல்ல.தற்போது திருமலையில் சுவையான உணவே வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒரே மாதிரியாக இல்லாமல் புதிய சுவையுடன் தரமாக வழங்கினால் நல்லது. பழைய சமையல் பாத்திரங்களை மாற்றி நவீன சமையல் கருவி களும் வாங்கப்பட உள்ளது. இதனால், விரைவில் திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு மேலும் சுவையான அன்னதானம் கிடைக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT