Published : 09 May 2018 05:59 PM
Last Updated : 09 May 2018 05:59 PM
வெளியிடப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைகளை சாட்சியாக, ஆதாரமாக எடுத்துக் கொள்வது நாடாளுமன்ற உரிமையை மீறுவதாகாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
3 தனித்தனியான ஆனால் ஒருமித்த தீர்ப்பில், சமூகத் தீமை ஒன்றைக் களைய வெளியிடப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்வது அதிகாரத்தின் வரம்புகளை எல்லைகளை மீறுவதாகாது. நீதித்துறைக்கும் ஆட்சியதிகாரத்துக்குமான மெல்லிய சமனிலை கெட்டு விடாது என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
செர்விக்கல் கேன்சர் வாக்சைன்கள் தொடர்பான மனு மீது இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஹியூமன் பபிலோமா வைரஸ், எச்பிவி வாக்சைன் தொடர்பான ஒரு வழக்கில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை கோர்ட்டில் மனுதாரரால் சாட்சியமாக எடுத்து வைக்கப்பட்டது.
மனுதாரருக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சால்வேஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான 81வது நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளது, அதில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human Papilloma Virus-HPV)வாக்சைன் தொடர்பான நிலைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரத்தை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
மருந்து நிறுவனங்களின் நிலைப்பாடு என்ன?
நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை கோர்ட்டில் ஆதாரமாக மனுதாரர் காட்டுவது குறித்து மருந்து நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் மனுதாரர் சார்பாக தீர்ப்பளித்த நீதிபதிகள் அமர்வு, நாடாளுமன்றத்தின் அறிக்கையை கோர்ட் நிராகரிக்க முடியாது. நீதிமன்றங்களும் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைகளை இருட்டடிப்பு செய்வதில் கைகோர்த்தால் அது சர்வாதிகாரத்துக்குத்தான் வழிவகுக்கும் என்று தெரிவித்தனர்.
நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைகளை கோர்ட்டில் சாட்சியாகப் பயன்படுத்த ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் சட்டத்தின் பிரிவு 57(4) அனுமதிக்கிறது என்று கூறினார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. மேலும் அது பொது ஆவணம் ஆகவே லோக்சபா தலைவரின் முன் அனுமதி கோரத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் ஒருமித்துக் கூறினர்.
மேலும் வரலாற்றுத் தரவுகளைச் சரிபார்க்க, பிரச்சினைகளின் தன்மையை அறிய, சமூகத் தீமையின் காரணம் அதனை தீர்க்கும் வழிகள் குறித்த விவகாரங்களில் நீதிமன்றங்கள் வெளியிடப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைகளை புறமொதுக்க ஒரு காரணமும் இல்லை, எனவே நாடாளுமன்ற உரிமைகளை மீறுவதாக இது ஆகாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
2010ம் ஆண்டு மார்ச் மாதம் ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் எச்பிவி வாக்சன்கள் எடுத்துக் கொண்டதையடுத்து சில பெண் குழந்தைகளும் மற்றும் சிலரும் மரணமடைந்தது குறித்த செய்திகள் வெளியாகியது, இந்த வாக்சைன் சோதனைகளை நடத்தியது அமெரிக்காவைச் சேர்ந்த புரோகிராம் ஃபார் அப்ராப்ரியேட் டெக்னாலஜி இன் ஹெல்த் (பாத்) என்ற முகமையாகும். இந்தத் திட்டத்துக்கு பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை நிதியுதவி அளித்ததாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT