Published : 12 Jul 2024 06:18 PM
Last Updated : 12 Jul 2024 06:18 PM
புதுடெல்லி: ஜூன் 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என அனுசரிக்கப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு தலைப்புச் செய்திக்கான முயற்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது. அறிவிக்கப்படாத 10 ஆண்டுகளாக அவரநிலையை பிறப்பித்தவர் அவர். அதன் காரணமாகவே, இந்த தேர்தலில் மக்கள் அவருக்கு தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மிக தோல்வியை வழங்கினர். தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4, மோடி விடுதலை நாளாக வரலாற்றில் பதிவாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்திய பிரதமர் இவர். இந்திய அரசியல் சாசனம் மனுஸ்மிருதியிலிருந்து உத்வேகம் பெறவில்லை என்பதால் அதனை நிராகரிக்கிறோம் என கூறியவர்களின் கருத்தியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமருக்கு, டெமாக்ரசி என்பது டெமோ-குர்சி மட்டுமே" என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக, ‘நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி, இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசியலமைப்பு படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும் உதவும். இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், அந்த கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல் வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ (ஜூன் 25) நினைவுபடுத்தும். காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட நெருக்கடி நிலை காரணமாக ஏற்பட்ட இந்திய வரலாற்றின் இருண்ட கட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக இது இருக்கும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்தது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT