Published : 12 Jul 2024 04:36 PM
Last Updated : 12 Jul 2024 04:36 PM

பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: பல்வேறு துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (12.07.2024) கூட்டாக சந்தித்தனர். போக்குவரத்து இணைப்பு, எரிசக்தி, வர்த்தகம், சுகாதாரம், வேளாண்மை, அறிவியல், பாதுகாப்பு, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றில் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் குழுவினருடன் பிரதமர் மோடி பயனுள்ள ஆலோசனைகளை நடத்தியதாகவும், பிராந்தியத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு பிம்ஸ்டெக் அமைப்பின் பங்களிப்பு அவர் எடுத்துரைத்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், அமைதியான, வளமான, பாதுகாப்பான பிம்ஸ்டெக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் கொள்கையையும், கிழக்கத்திய நாடுகள் தொடர்பான கொள்கையையும் விவரித்ததாகவும், இந்தியாவின் கொள்கைகள் இந்த மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வை கொண்டது என எடுத்துரைத்ததாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. அதோடு, செப்டம்பரில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டையொட்டி அந்நாட்டுக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இணைப்பு, எரிசக்தி, வர்த்தகம், சுகாதாரம், விவசாயம், அறிவியல், பாதுகாப்பு மற்றும் மக்களிடையே பரிமாற்றம் உள்ளிட்ட பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் பற்றி இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. வெற்றிகரமான உச்சிமாநாட்டிற்கு தாய்லாந்திற்கு முழு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x