Published : 12 Jul 2024 01:56 PM
Last Updated : 12 Jul 2024 01:56 PM
புதுடெல்லி: காற்றின் தரம், பருவநிலை மாற்றம், காடுகள், இயற்கை வளங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், வனவிலங்குகள் உள்ளிட்டவை குறித்து இந்தியா - பூடான் இடையே இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பூடான் அரசின் எரிசக்தி, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ஜெம் ஷெரிங் தலைமையிலான அந்நாட்டுப் பிரதிநிதிகள் குழு, மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை புதுடெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. காற்றின் தரம், பருவநிலை மாற்றம், வனங்கள், இயற்கை வளங்கள், வனவிலங்குகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான அம்சங்கள் குறித்து இந்த பேச்சு வார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்முயற்சியான சர்வதேச புலிகள் கூட்டமைப்பில் இணைந்ததற்காக பூடான் அரசுக்கு மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளும் ஒரே மாதிரியான புவியியல், சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். பருவநிலை மாற்றம், காற்றின் தரம், வனவிலங்கு மேலாண்மை சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இணைந்து பணியாற்ற இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. கூட்டு பணிக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என இந்தியா பரிந்துரைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT