Published : 12 Jul 2024 01:43 PM
Last Updated : 12 Jul 2024 01:43 PM
புதுடெல்லி: பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதே மோசடி தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கால் கேஜ்ரிவால் தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில், இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சித் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி பொதுசெயலாளர் சந்தீப் பதக் கூறுகையில், “இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, ஜாமீன் வழங்கியிருப்பதன் மூலம் மதுபானக் கொள்கை ஊழல் என்பதை நீதிமன்றம் தகர்த்துள்ளது. இப்போது பாஜக இந்த வழக்கை முடிக்க வேண்டும். மக்களின் நேரத்தை வீணடிக்கக் கூடாது. தேர்தலில் தோற்கடிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர்களை பாஜக சிறையில் அடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி அமைச்சர் அதிஷி கூறுகையில், “போலி மதுபான கொள்கை விசாரணை என்பது பாரதிய ஜனதா கட்சியின் சதி என்பதை இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் ஆதாரம் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார். ரோஸ் அவன்யூ நீதிமன்றம் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியபோது, அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அவருக்கு எதிராக அமலாக்கத் துறை ஒருதலைபட்சமாக நடந்துள்ளது. ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த இடைக்கால ஜாமீன் உத்தரவு அரவிந்த் கேஜ்ரிவால் உண்மையின் பக்கம் நிற்கிறார், அவர் அதனை தொடர்வார் என்பதைக் காட்டுகிறது” என்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் தனது எக்ஸ் தள பதிவில், “போலி வழக்குகள் மூலம் எவ்வளவு காலத்துக்கு உண்மையை சிறையில் அடைத்து வைப்பீர்கள் மோடி?. உங்களின் சர்வாதிகாரத்தை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அது இருக்கட்டும்.. அமலாக்கத் துறை அரவிந்த் கேஜ்ரிவாலை பொய்யாக சிக்கவைத்துள்ளது என்று உச்ச நீதிமன்றம், அனைவரும் நம்புகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் முடிவு உண்மைக்கு கிடைத்த வெற்றி, சர்வாதிகாரத்துக்கான வீழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே டெல்லி பாஜக தலைவர் விரேந்தி சச்தேவா கூறுகையில், “இடைக்கால ஜாமீன் கிடைக்கப் பெற்றதாலேயே அரவிந்த் கேஜ்ரிவால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை. இந்த விவகாரம் இன்னும் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என்றுகூறி உச்ச நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஜூலை 12) உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அதில் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT