Published : 12 Jul 2024 01:04 PM
Last Updated : 12 Jul 2024 01:04 PM
பெங்களூரு: வால்மீகி கார்ப்பரேஷன் ஊழல் வழக்கு தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வுமான பி.நாகேந்திரனை தடுப்புக் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் போது செய்தியாளர்களிடம் பேசிய நாகேந்திரன், "நான் எனது வீட்டில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறேன். இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.
முன்னதாக கடந்த மே 21-ம் தேதி பெங்களூரு மாநகராட்சியின் கணக்கு கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தற்கொலை செய்து கொண்டார். அவர் விட்டுச்சென்ற தற்கொலை குறிப்பில், பல்வேறு அதிகாரிகள் மாநகாரட்சியின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோதமாக பணத்தினை வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்ற முயல்கின்றனர்.
அரசின் காப்பரேஷன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.187 கோடி சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் ஹைதராபாத்தினை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு வங்கி கணக்குகளில் ரூ.88.62 கோடி சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், அதிகரித்து வந்த அழுத்தம் காரணமாக அப்போது பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த பி. நாகேந்திரன் ஜூன் 6-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவாகரம் குறித்து விசாரணை நடத்த கர்நாடகா காங்கிரஸ் அரசு சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இந்த ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக நாகேந்திராவின் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு விரிவான சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரின் பெயரில் மத்திய புலனாய்வு முகமையும் இந்த விகாரத்தை ஒரே நேரத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே நாகேந்திரன் மற்றும் தாத்தல் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத் துறை சோதனையை கர்நாடகா பாஜக தலைவர் பி. ஒய்.விஜயேந்திரா வரவேற்றுள்ளார், அவர் கூறுகையில், “மாநில வரலாற்றிலேயே இதுவரை கேட்டிராத அளவில் மிகப்பெரிய ஊழலாக இது இருக்கலாம். பழங்குடியின மக்களுக்காக சேமித்து வைக்கப்பட்ட பணம் முறைகேடாக வேறு மாநிலத்தில் நடந்த தேர்லுக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT