Published : 12 Jul 2024 07:16 AM
Last Updated : 12 Jul 2024 07:16 AM
புதுடெல்லி: சென்னை ஐஐடி உதவியுடன் மத்திய கல்வித் துறையின் வித்யா சக்தி திட்டத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இத்திட்டத்தால் பிரதமர் நரேந்திர மோடியின் வாராணசி தொகுதியில் 357 பள்ளிகளில் பயிலும் சுமார் 50,000 மாணவர்கள் பலன் பெறுகின்றனர்.
மத்திய கல்வி அமைச்சகத்தால், கடந்த 2021-ல் ‘கல்வி சக்தி’ எனும்திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இது, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்கள் இடையே கரோனா பரவலில் உருவான ‘அறிவுஇடைவெளியை’ நிரப்புவதை நோக்கமாக கொண்டது. இதன் 150 மையங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் கிராமப்புறக் குழந்தைகளுக்கு இலவச ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதை சென்னை ஐஐடியின் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை மற்றும் தமிழகத்தின் ஓபன்மென்டார் அறக்கட்டளை இணைந்து நடத்துகின்றன. இதே திட்டம் வடஇந்தியா உள்ளிட்ட பிற மாநிலங்களில் ‘வித்யா சக்தி’ எனும் பெயரில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வித்யா சக்தி திட்டம் கடந்த வருடம் பிரதமர் மோடியின் வாராணசி தொகுதியில் 100 பள்ளிகளில் தொடங்கப்பட்டது. 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த திட்டம், இன்று ஜுலை 12 முதல் வாராணசியில் மேலும்257 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. இன்று நடைபெறும் விழாவில் உ.பி. மாநில இணை அமைச்சர் ரவீந்திர ஜெய்ஸ்வால், வாராணசி ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’நாளிதழிடம் வித்யா சக்தியின் சர்வதேச அமைப்பாளர் சிவா சுப்ரமணியன் கூறுகையில், ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் அவர்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வதால், கிராமப்புற குழந்தைகளுக்கு சரியான அணுகல் இல்லை. கூடுதல் பயிற்சி வகுப்புகள். எங்கள் ஆன்லைன் வகுப்புகள் இந்த இடைவெளியைக் குறைக்கின்றன. இதற்காக, பள்ளிகளில் இணைய இணைப்பு, ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திற்கும் அல்லது பள்ளிக்கும் ஒருங்கிணைப்பாளராக கிராமப்புற பட்டதாரி பெண்கள் நியமிக்கப்படுகின்றனர்” என்றார்.
சென்னை ஐஐடி பதிவாளர் காமகோடி கூறும்போது, “கடந்த ஒரு வருடமாக வாராணசியில் சோதனை அடிப்படையில் நடைபெற்ற வித்யா சக்தி திட்டம், இப்போது முழுமையாக தொடங்கப்படுகிறது. இதற்கு வாராணசி மாவட்ட ஆட்சியர் அளிக்கும் ஒத்துழைப்பும் காரணம். இத்திட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பலன் பெறுகின்றனர்” என்றார்.
வித்யா சக்தி குறித்து, ஓபன்மென்டாரின் நிர்வாக அறங்காவலரும், ரெசிலியோ லேப்ஸ் எல்எல்பி நிறுவனருமான நாகராஜன் கூறுகையில், “இது ஒத்தஎண்ணம் கொண்ட பல நிறுவனங்களை உள்ளடக்கிய திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் 20, அருணாச்சல பிரதேசத்தில் 10 இடங்களில் நிறுவப்பட்ட கிராமப்புற தொடர்பு மையங்கள் சமூகஇலக்கை நோக்கி செயல்படுகின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT