Published : 11 Jul 2024 04:02 PM
Last Updated : 11 Jul 2024 04:02 PM

உ.பி. வெள்ளத்தில் 60+ கிராமங்கள் பாதிப்பு: ஹெலிகாப்டரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கால் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூர், ஷ்ரவஸ்தி, பஸ்தி, கோரக்பூர், பல்லியா மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள ரப்தி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்ராம்பூர், துளசிபூர், உத்ராலா ஆகிய பகுதிகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்ராம்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நேபாளத்தில் இருந்து கீழ்நோக்கி வரும் நீர் வரத்து காரணமாகவும், ரப்தி ஆற்றில் வெள்ளம் அபாயக் கட்டத்தைக் கடந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், வெள்ளத்தில் மூழ்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று (வியாழன்) பல்ராம்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். இதேபோல், ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

பின்னர், ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் ஒன்றுக்கு வருகை தந்த யோகி ஆதித்யாநாத், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். ​​அவர்களுக்கு உதவித் தொகைக்கான காசோலைகள் மற்றும் நிவாரணப் பொருள்களை முதல்வர் வழங்கினார்.

இதேபோல், பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்ற முதல்வர், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். ​​பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை அவர் வழங்கினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு சுறுசுறுப்புடனும், உணர்வுடனும் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உதவ அரசு முழு தயார்நிலையுடன் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x