Published : 11 Jul 2024 02:56 PM
Last Updated : 11 Jul 2024 02:56 PM
மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மகா விகாஸ் அகாதி கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இதில், காங்கிரஸ் 130 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி), சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாதி, தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மூன்று முக்கிய கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், என்சிபி-எஸ்பி, மற்றும் சிவசேனா (யுபிடி) ஆகியவற்றின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், காங்கிரஸ் கட்சி 120-130 தொகுதிகளிலும், சிவசேனா (யுபிடி) 90-100 இடங்களிலும், என்சிபி-எஸ்பி 75-80 இடங்களிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்க உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்த பாஜக ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 29ம் தேதி நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஆஷிஷ் ஷெலர், “பாஜக தனது மஹாயுதி கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும். அதற்கான திட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாஜகவின் மாநில பிரிவில் எந்த அமைப்பு மாற்றமும் செய்யப்படாது. இந்த கூட்டத்தில், மகாராஷ்டிர நிதிநிலை அறிக்கையை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏனெனில், இந்த நிதிநிலை அறிக்கை, விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலன்களையும் உள்ளடக்கி உள்ளது” என்று தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 48 தொகுதிகளில், காங்கிரஸ் 13 இடங்களையும், சிவசேனா (யுபிடி) 9 இடங்களையும், என்சிபி-எஸ்பி 8 இடங்களையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment