Published : 11 Jul 2024 02:51 PM
Last Updated : 11 Jul 2024 02:51 PM
ஸ்ரீநகர்: “ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு இடையில், தீவிரவாதிகளின் மீதான பாதுகாப்பு படையினரின் ஆதிக்கத்தை நிரூபிக்க ஜம்மு காஷ்மீரில் சரியான நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த ஓமர் அப்துல்லா, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “யூனியன் பிரதேசங்களில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. நிலைமை இன்னும் 1996-ம் ஆண்டை விட மோசமாக இருக்கிறதா? பதில் ஆம் எனில் இங்கு தேர்தல் நடத்த வேண்டாம். இங்கு தாக்குதல் நடத்தும் சக்திகளுக்கு முன்னால் அவர்கள் தலைவணங்க விரும்பினால் தேர்தல் நடத்த வேண்டாம். எங்களின் ஆயுதப்படை மற்றும் போலீஸின் பலத்தை விட தீவிரவாதிகளின் ஆதிக்கம் பெரியது என்று அவர்கள் நிரூபிக்க விரும்பினால் இங்கு தேர்தல் நடத்த வேண்டாம். உங்களுக்கு தைரியம் இல்லை என்றால், பயமாக இருந்தால் அதனை நீங்கள் செய்யவேண்டாம்.
ஆனால், நமது ராணுவம் மற்றும் போலீஸின் ஆதிக்கத்தை காட்ட விரும்பினால், நமது ஆட்சியாளர்களுக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால் அந்த சக்திகளுக்கு முன் ஏன் தலைவணங்க வேண்டும். இங்கு சரியான நேரத்தில் தேர்தல் நடத்தினால், ஜம்மு காஷ்மீர் மக்கள் அவர்களுக்கான அரசை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதில்லை என்ற பிசிசிஐ-யின் முடிவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அப்துல்லா, “பல ஆண்டுகளாக இரண்டு நாடுகளும் இணைந்து இருதரப்பு தொடரில் விளையாடி நாம் பார்க்கவில்லை. அணியை ஒரு தொடரில் விளையாட அனுப்புவது பிசிசிஐ-ன் முடிவு.
உறவுகளை மேம்படுத்துவதில் பாகிஸ்தானின் பொறுப்பு அதிகம். அந்நாடு தாக்குதல்களை நிறுத்த வேண்டும், தற்போதைய சூழல் மேம்படுத்தப்பட வேண்டும். இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் பாகிஸ்தான் அதன் பணியைச் செய்யவேண்டும்” என்றார்.
நீட் தேர்வு குறித்த கேள்விக்கு, “இது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும். விசாரணை மூலமாகவே, நீதிமன்றம் மூலமாகவோ அல்லது அரசோ இந்த விவகாரத்தில் விரைவாக முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறோம்” என்றார்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் குறிப்பாக பூஞ்ச், ரஜோரி, தோடா மற்றும் ரெய்சி போன்ற எல்லையோர மாவட்டங்களில் தொடர் பதுங்குகுழி மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT