Published : 11 Jul 2024 01:37 PM
Last Updated : 11 Jul 2024 01:37 PM
புதுடெல்லி: ஜூலை மூன்றாவது வாரத்தில் இருந்து நான்கு சுற்றுகளாக இளநிலை நீட் கலந்தாய்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது தொடர்பாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை மூலம் 44 பக்க பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ‘இளநிலை நீட் கலந்தாய்வு செயல்முறை ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு சுற்றுகளாக நடத்தப்படும். கலந்தாய்வு செயல்பாட்டின் போதோ அல்லது அதற்குப் பிறகோ, முறைகேடுகளில் பயனடைந்த மாணவர்கள் விண்ணப்பத்திருந்தால், அந்த விண்ணப்பம் எந்தக் கட்டத்திலும் ரத்து செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, “வினாத்தாள் கசிவு பரவலாக நடந்ததா, அல்லது தனி சம்பவமா என்பதை கண்டறிய வேண்டும். கசிந்த வினாத்தாளுக்கு பணம் கொடுத்தவர்கள், வினாத்தாளை விநியோகம் செய்தவர்கள் மீது இரக்கம் காட்ட கூடாது. வினாத்தாள் கசிவு பரவலாக நடந்திருந்தாலோ, தவறு செய்தவர்களை கண்டறிய முடியாவிட்டாலோ மறுதேர்வுக்கு உத்தரவிடலாம். எனினும், மறு தேர்வுக்கு உத்தரவிடும்போது கவனமாக இருக்க வேண்டும். இது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம். சிலர் மோசடி செய்தனர் என்பதற்காக தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யக் கூடாது. மறு தேர்வு எங்களது கடைசி முடிவாகவே இருக்கும்.
ஏற்கெனவே இந்த விவகாரத்தை சிபிஐ, காவல் துறை விசாரித்து வருகிறது. பல்துறை நிபுணர் குழு தீவிரமாக விசாரிக்க வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு எத்தனை மணி நேரத்துக்கு முன்பு வினாத்தாள் கசிந்தது, பல மணி நேரம் முன்பே கசிந்திருந்தால் அது எத்தனை மாணவர்களுக்கு சாதகமாக அமைந்தது என்பது பற்றிய தகவலை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆதாரப்பூர்வமாக அளிக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எப்படி செல்கிறது, எந்த நேரத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, எப்போது மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது தொடர்பான தகவல்களை மத்திய அரசும், என்டிஏவும் வழங்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT