Last Updated : 11 Jul, 2024 11:57 AM

 

Published : 11 Jul 2024 11:57 AM
Last Updated : 11 Jul 2024 11:57 AM

சமாஜ்வாதி இதழில் முதன்முறையாக ஆங்கில மொழி கட்டுரை: மாற்றத்துக்கு தயாராகிறதா அகிலேஷ் கட்சி!

அகிலேஷ் யாதவ் | கோப்புப்படம்

புதுடெல்லி: ஆங்கிலத்துக்கு எதிரான சமாஜ்வாதி கட்சி இதழில் முதன்முறையாக ஆங்கில மொழியில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதனால், இந்தி மொழியின் தாய் மாநிலமான உத்தர பிரதேசத்தில் அம்மொழி அறிந்தவர்கள் எண்ணிக்கை குறைகிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருப்பது சமாஜ்வாதி கட்சி. இக்கட்சி நான்கு முறை உத்தர பிரதேசத்தில் ஆட்சி செய்தது. கடந்த அக்டோபர் 1992-ல் சமாஜ்வாதி கட்சியை அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் நிறுவினார். அதற்குமுன்பு அவர் ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்தபோது 1989-ல் முதன்முறையாக உத்தர பிரதேசத்தின் முதல்வராகி இருந்தார். அப்போது அவர், ஆங்கிலத்துக்கு எதிராக பிரச்சாரம் துவக்கினார்.

இது, அம்மாநிலக் கல்வி நிலையங்களில் ஆங்கிலக் கல்வி மற்றும் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் ஆங்கிலத்துக்கு எதிராகவும் நின்றிருந்தது. இத்துடன், கணினிகள் அறிமுகமான காலங்களில் சமாஜ்வாதி, கணினி மயமாக்கலுக்கும் எதிராக இருந்தது.

மக்களவை தேர்தல் 2009-ல் இக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மனித உழைப்பை குறைப்பதால் தம் கட்சி கணினிமயமாக்கலை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. சமாஜ்வாதியின் தற்போதையத் தலைவரான அகிலேஷ் யாதவும் தன் தந்தை முலாயமை போல, இந்தி மொழி மீது அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

இதனால், இந்தி மொழியின் தாய் மாநிலமான உத்தர பிரதேச மண்ணின் மைந்தராகவும் அகிலேஷ் முன்னிறுத்தப்பட்டு வந்தார். இச்சூழலில், சமாஜ்வாதி கட்சியின் அதிகாரபூர்வ மாத இதழான, ‘சமாஜ்வாதி புல்லட்டின்’-ல் முதன்முறையாக ஆங்கிலக் கட்டுரை வெளியாகி உள்ளது.

முன்னாள் முதல்வரான அகிலேஷ் பெயரில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது. ’ச்சாகயே அகிலேஷ் (எங்கும் பரவிய அகிலேஷ்)’ என்ற இந்தி தலைப்பில் ஆங்கில மொழியில் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் இந்தி இதழில் முதன்முறையாக வெளியான ஆங்கிலக் கட்டுரையால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இக்கட்டுரையால், மாநிலத்தில் இந்தி அறிந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் சமாஜ்வாதி வென்றிருந்தது. இதன்மூலம், சமாஜ்வாதி தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தது. இதன் பெருமையை விளக்கி இருப்பதுடன், முதன்முறையாக வென்ற இளம் எம்.பி.க்கள் பற்றியும் அக்கட்டுரையில் பேசியுள்ளார் அகிலேஷ். இதில் கைரானாவின் இக்ரா ஹசன், மச்சிலிஷெஹரின் பிரியா சரோஜ் மற்றும் கவுசாம்பியின் புஷ்பேந்திரா சரோஜ் ஆகிய மூவரும் இடம் பெற்றிருக்கின்றனர்.

இவர்களில் புஷ்பேந்திரா 25 வயதில் எம்.பி.யாகி முன்பிருந்த சாதனையை முறியடித்துள்ளார். இதுபோன்ற சாதனைகளை முன்னிறுத்தும் பொருட்டு தன் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி அகிலேஷ் வெளியிட்டதாகத் தெரிகிறது. எனினும், இதை இந்தியில் வெளியிடாதது அம்மொழி அறிந்தவர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதை காட்டுவதாக சர்ச்சையைக் கிளம்பியுள்ளது.

இது குறித்து இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் சமாஜ்வாதியின் தேசிய செய்தித் தொடர்பாளரான ராஜேந்தர் சவுத்ரி கூறும்போது, “எங்கள் கட்சி இந்தி மொழிக்கான முக்கியத்துவம் எப்போதுமே அளித்து வருகிறது. முன்னாள் பிரதமர் சரண்சிங் ஆங்கிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவை பிறகு இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

எங்கள் கட்சி இதழில், முதன்முதலாக அகிலேஷ் எழுதியதை தொடர்ந்து இனி ஆங்கிலக் கட்டுரைகளும் அதில் வெளியாகும். ஆங்கிலத்தை அதிகம் பயன்படுத்தும் புதிய இளம் சமுதாயம் மற்றும் தொழில்நுட்பத்தை மனதில் வைத்து இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எங்கள் கட்சியின் சாதனைகள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சென்றடவது அவசியம். ஆனால், எங்கள் அடிப்படை கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது. இதில், இந்தியும் இதர மொழிகளுக்குமான உரிய மதிப்பு தொடரும்.” என்று தெரிவித்தார்.

இந்தி அதிகம் பேசும் உத்தர பிரதேச மாநிலப் பள்ளி மாணவர்களிடம் அம்மொழிக்கானத் திறன் குறைந்து வருவதாக புகார் உள்ளது. கடந்த ஜுன் 2020-ல் ப்ளஸ் டூ மாணவர்களுக்கான இந்தி பாடத் தேர்வின் முடிவுகள் வெளியானது. சுமார் 56 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வில், 7.97 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தேர்ச்சிபெறவில்லை. மேலும் 2.9 லட்சம் மாணவர்கள் தங்களின் இந்தி பாடத் தேர்வை எழுதத் தவறிவிட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x