Published : 10 Jul 2024 06:58 PM
Last Updated : 10 Jul 2024 06:58 PM

உ.பி. அரசின் நிர்வாகத் தோல்வியே ஹாத்ரஸ் உயிரிழப்புகளுக்கு காரணம்: அகிலேஷ் குற்றச்சாட்டு

அகிலேஷ் யாதவ் | கோப்புப் படம்

லக்னோ: உத்தரப் பிரதேச அரசின் நிர்வாகத் தோல்வியே ஹாத்ரஸ் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் சைஃபை நகரில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "கடந்த 2-ம் தேதி ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 112 பெண்கள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச அரசின் தோல்வியே இதற்குக் காரணம். மாநில அரசும் இதை ஒப்புக்கொண்டுள்ளது. அதனால்தான் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அரசின் தவறான நிர்வாகத்தால் இந்த சம்பவம் நடந்தது என்பதையே காட்டுகிறது.

லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் இன்று (புதன்) ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இதுபோன்ற விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் பாஜக அரசின் அலட்சியமே காரணம். விரைவுச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விரைவுச் சாலையில் சிறப்பு பார்க்கிங் மண்டலம் உள்ளது. அங்கே வாகனத்தை நிறுத்தாமல், நடுரோட்டில் வாகனம் நிறுத்தப்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதிவேக நெடுஞ்சாலையில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. அந்த பணம் அதிவேக நெடுஞ்சாலையின் அமைப்பு மற்றும் நிர்வாகத்திற்கு பயன்படுத்தப்படுவதற்கு பதிலாக வேறு எங்காவது போகிறதா என்ற கேள்விக்கு பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்.

பாஜக ஆட்சியில் மக்களின் உயிருக்கு மதிப்பில்லை. சாலை விபத்துகள் முதல் பல பெரிய விபத்துக்கள் தினமும் நடக்கின்றன. இதில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களுக்குப் பின்னால், அலட்சியமும் செயலற்ற தன்மையும் இருப்பது அம்பலமாகி வருகிறது. உத்தரப்பிரதேச பாஜக அரசின் கீழ் ஒட்டுமொத்த அமைப்பும் செயலற்றதாகவும், உணர்வற்றதாகவும் மாறிவிட்டது. ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசும் நிர்வாகமும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில்லை. பொதுமக்கள் ஆதரவற்றவர்களாக உள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி கட்டுகிறோம் என்ற பெயரில் ஊழல் செய்கிறார்கள். நகரங்கள் மோசமான நிலையில் உள்ளன. சாலைகளில் பள்ளங்கள் உள்ளன. தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளங்களால் விபத்துகள் நடக்கின்றன. வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மக்கள் உயிரை இழக்கிறார்கள். சுகாதார சேவைகளும் பயனற்றதாகி விட்டது. வேலையின்மை மற்றும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் சுற்றித் திரிகின்றனர். பாஜக அரசு முழுக்க முழுக்க பொய்களில் இயங்குகிறது. யதார்த்தத்திலிருந்து விலகி இருக்கிறார்கள்" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x