Published : 10 Jul 2024 05:25 AM
Last Updated : 10 Jul 2024 05:25 AM

ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சதி: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் 121 பேரின் உயிரை பறித்த ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தின் பின்னணியில் மிகப் பெரிய சதிக்கான வாய்ப்பு இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பிறகு போலே பாபா புறப்படும்போது ஏற்பட்ட நெரிசலில் கிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு ஆக்ரா ஏடிஜிபி அனுபம் குல்ஷேத்ரா, அலிகர் மண்டல ஆணையர் வி.சைத்ரா ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இக்குழு தனது விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கூட்ட நெரிசலுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முதன்மை காரணம் என எஸ்ஐடி கூறியுள்ளது. சம்பவத்தை நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் இதனைகூறியுள்ளது. மேலும் தாலுகா அளவிலான போலீஸார் மற்றும் நிர்வாக அதிகாரிகளும் குற்றவாளிகள் என கண்டறிந்து உள்ளது.

இந்த அதிகாரிகள் நிகழ்ச்சியைதீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. நிகழ்ச்சி குறித்து தங்கள் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்ல. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்யாமலும் தனது மூத்த அதிகாரிக்கு தகவல் தெரிவிக்காமலும் நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும் பல்வேறு உண்மைகளை மறைத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றுள்ளனர். போதுமான ஏற்பாடுகளை செய்யவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் இருந்தவர்கள் குழப்பத்தை பரப்பினர். சரியானபோலீஸ் சரிபார்ப்பு இல்லாமல்சிலர் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏற்பாட்டுக் குழுவினர் காவல்துறையினரிடம் தவறாக நடந்துகொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்யவிடாமல் தடுக்க முயன்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், தடுப்புகள் அல்லது பாதை ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. கூட்ட நெரிசலின் போது ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதிக்கானவாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது என எஸ்ஐடி கூறியுள்ளது. எனவே முழுமையான விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது.

நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், நேரில்கண்ட சாட்சிகள் என 125 பேரின் வாக்குமூலத்தை எஸ்ஐடி பதிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இந்த அறிக்கையில் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை.

அதிகாரிகள் நீக்கம்: எஸ்ஐடி-யின் விசாரணை அறிக்கையை தொடர்ந்து கடமையில் இருந்து தவறியதாக மாவட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர், சர்க்கிள் அதிகாரி, காவல் நிலைய இன்ஸ்பெக்டர், புறக்காவல் நிலையபொறுப்பாளர்கள் இருவர் ஆகியோரை உத்தரபிரதேச அரசு நேற்று இடைநீக்கம் செய்துள்ளது.

நெரிசல் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் கண்காணிப்பில் நிபுணர் குழு விசாணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 12-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x