Published : 10 Jul 2024 06:23 AM
Last Updated : 10 Jul 2024 06:23 AM
விஜயவாடா: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், கொண்டா வெங்கடப்பைய்ய காலனியை சேர்ந்தவர் மதுபாபு (30).இவர் குண்டூர் எஸ்பி. அலுவ லகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மதுபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனை சமாளிக்க ஆன்லைன் மூலம் கடன் பெற்றேன். அவர்கள் கடனை அடைக்கநச்சரித்தனர். பலரிடம் கடன் கேட்டேன். யாரும் உதவவில்லை.
அப்போது முகநூல் வழியாக அறிமுகமான பாஷா என்பவர், “நீ ஒரு சிறுநீரகத்தை வழங்கினால், உனக்கு ரூ.30 லட்சம் பெற்று தருகிறேன்” என கூறினார். கடனையும் அடைத்து விட்டு, குடும்பத்தையும் நன்றாக பார்த்து கொள்ளலாம் என நினைத்து சிறுநீரகத்தை வழங்க ஒப்புக்கொண்டேன்.
பாஷா என்னை இடைத்தரகர் வெங்கட் என்பவரிடம் அழைத்து சென்று, அங்கு எனக்கு ரூ.59 ஆயிரம் முன்பணமாக வழங்கினார். அதன் பின்னர், விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். உறவினர்கள் மட்டுமே சிறுநீரகத்தை தானமாக வழங்கலாம் எனும் சட்டம் உள்ளதால், என்னுடைய ஆதார் அட்டையை கூட அவர்களுக்கு சாதகமாக மாற்றி கொண்டனர். எனது இடது பக்க சிறுநீரகத்தை எடுத்து வெங்கடசாமி எனும் நோயாளிக்கு வழங்கப்போவதாக கூறி, கடந்த மாதம் 15-ம் தேதி அறுவை சிகிச்சை செய்தனர். நான் கண் விழித்து பார்த்த போது, இடது சிறுநீரகத்திற்கு பதிலாக வலது சிறுநீரகம் எடுக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
ஒப்பந்தப்படி எனக்கு ரூ.30 லட்சம் வழங்கவில்லை. அதனை நான் நோயாளியின் உறவினரான சுப்பிரமணி, இடைத்தரகர் வெங்கட், மருத்துவர் சரத்பாபு ஆகியோரிடம் கேட்டதற்கு, ‘‘சிறுநீரகத்தை எடுத்த எங்களுக்கு உன் உயிரை எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்” என கூறி என்னை மிரட்டினர். நான் ஏமாற்றப்பட்டது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளேன்.
இவ்வாறு மதுபாபு கூறினார்.
இது குறித்து குண்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், விஜயவாடாவை மையமாகவைத்து ஏற்கனவே இதேபோன்று சிறுநீரக மோசடிகள் நடந்த சம்பவம்குறித்தும் போலீஸார் விசாரணையை தொடங்கினர். இதனை அறிந்த ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா, நேற்று விஜயவாடா போலீஸ் ஆணையர், குண்டூர் ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோரிடம்இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். உடனடியாக சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீதும், சம்மந்தப்பட்ட ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள் என உத்தரவிட்டார்.
டாக்டர் சரத்பாபு விளக்கம்: விஜயவாடாவில் உள்ள சரத் இன்ஸ்ட்டியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூராலஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சரத்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அரசு நிபந்தனைகளின்படிதான், சிறுநீரகம் அதற்கு தகுந்த நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வழங்கப்பட்டுள்ளது. நோயாளிக்கு அவரது உறவினரான மதுபாபுமூலம் தான் சிறுநீரகம் தானமாக வழங்கப்பட்டது. மதுபாபு கூறுவதில் உண்மையில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT