Published : 08 Jul 2024 04:29 PM
Last Updated : 08 Jul 2024 04:29 PM

கனமழையால் தத்தளிக்கும் மும்பை: மக்கள் வெளியே வரவேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் அறிவுரை

இடம்: மும்பை | படம்: இம்மானுவேல் யோகினி

புதுடெல்லி: மும்பையில் கனமழை - வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பெய்துள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பேருந்து, ரயில் சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை நகரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவைகள், விமான நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக, 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திங்கள்கிழமை மும்பையில் கனமழை நிலவரம் குறித்து மந்த்ராலயாவில் கூட்டத்தை நடத்தி பிரஹன்மும்பை மாநகராட்சியின் (பிஎம்சி) கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார். கூட்டத்தைத் தொடர்ந்து, மந்த்ராலயாவில் ஷிண்டே பேரிடர் துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று நிலவரத்தை ஆய்வு செய்தார்.

இது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, “குறைந்த நேரத்தில் நிறைய மழை பெய்துள்ளது, இதனால், ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம், கடற்கரைக்கு அருகில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று காவல் துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

முனிசிபல் கார்ப்பரேஷனின் 461 மோட்டார் பம்புகளும், ரயில்வேயின் 200 பம்புகளும் இயங்குகின்றன. காலையில் இருந்து அனைத்து துறைகளுடன் தொடர்பு கொண்டேன். மத்திய மற்றும் துறைமுக ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் ஆய்வு செய்தேன். கடலோர பகுதிகளில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் குறித்து விவாதிக்க இன்று நடைபெறவிருந்த அனைத்துக் கட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் ஷம்புராஜ் தேசாய் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x