Published : 08 Jul 2024 03:48 PM
Last Updated : 08 Jul 2024 03:48 PM

ஜார்க்கண்ட் | நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் உரையாற்றும் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன், ஊழல் புகார் காரணமாக அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, புதிய முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் பொறுப்பேற்றார்.

ஊழல் வழக்கில் கடந்த ஜூன் 28-ம் தேதி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது. ஹேமந்த் சோரன் விடுதலையானதை அடுத்து, சம்பாய் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கடந்த 4-ம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றார்.

இதையடுத்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 8) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 81 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில், 5 உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளதால் மொத்தம் 76 உறுப்பினர்கள் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 45 பேர் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர் தரப்பில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வாக்கெடுப்புக்கு முன்பாக நடைபெற்ற விவாதத்தில் பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியான பாஜக மீது குற்றம் சாட்டினார். ஹேமந்த் சோரன் பேசத் தொடங்கியவுடன், பாஜக எம்எல்ஏ-க்கள் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஹேமந்த் சோரன் அரசியலமைப்பை கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

அப்போது பேசிய சோரன், “இன்று அமளியில் ஈடுபடும் பாஜக எம்எல்ஏ-க்களில் பாதி பேர் கூட அடுத்த சட்டமன்றத்துக்கு தேர்வாக மாட்டார்கள். அவர்கள் மத்திய அமைப்புகளைப் பயன்படுத்தி தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள். அவர்கள் பண பலத்தைக் கொண்டு, 'ஆபரேஷன் தாமரை'-க்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள்” என குற்றம் சாட்டினார்.

விவாதத்தின்போது பேசிய ​​எதிர்க்கட்சித் தலைவர் அமர் குமார் பௌரி, “அரசு அமைந்தால் வேலையில்லாத் திண்டாட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று ஹேமந்த் சோரன் உறுதி கூறியிருந்தார். அப்படி நடக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்றும் அவர் கூறினார். இந்த விஷயத்தில் அரசு மக்களை ஏமாற்றுகிறது. முதியோர்களுக்கு நான்கு மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அனைத்து தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இளைஞர்களுக்கு 5 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி முழுமையடையாததால் பழங்குடி இளைஞர்கள், விளிம்பு நிலையிலேயே இருக்கிறார்கள். ஊழலின் அனைத்து சாதனைகளையும் இந்த அரசு முறியடித்துள்ளது. மாநிலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன” என குற்றம் சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x