Published : 08 Jul 2024 01:10 PM
Last Updated : 08 Jul 2024 01:10 PM

சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியேற்போம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

பூரி கடற்கரையின் அழகை ரசிக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

பூரி: சுற்றுச்சூழலைப் பாதுகாத்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நம்மால் இயன்றதைத் தனியாகவும், உள்ளூர் அளவிலும் செய்ய உறுதியேற்போம் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

பூரி ஜகந்நாதர் ஆலய ரத யாத்திரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இன்று (ஜூலை 8) காலை கடற்கரையில் சிறிது நேரம் செலவிட்டார்.

பின்னர், இயற்கையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அனுபவத்தைப் பற்றி அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: “வாழ்க்கையின் சாரத்துடன் நம்மை நெருக்கமாக இணைக்கும் இடங்கள் பல உள்ளன. நாம் இயற்கையின் ஒரு பகுதி என்பதை அவை நினைவூட்டுகின்றன. மலைகளும், காடுகளும், ஆறுகளும், கடற்கரைகளும் நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை ஈர்க்கின்றன. இன்று நான் கடற்கரையில் நடந்து செல்லும்போது, சுற்றுப்புறங்களுடன் ஒரு ஒற்றுமையை உணர்ந்தேன் - மென்மையான காற்று, அலைகளின் கர்ஜனை, மகத்தான நீர் விரிவு. அது ஒரு தியான அனுபவமாக அமைந்தது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மஹாபிரபு ஸ்ரீ ஜகந்நாதரை தரிசனம் செய்தபோது நான் உணர்ந்த ஆழ்ந்த உள் அமைதியை அது எனக்கு அளித்தது. அத்தகைய அனுபவத்தைப் பெறுவது நான் மட்டுமல்ல; நம்மை விட மிகப் பெரிய, நம்மை தாங்கி நிற்கிற, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிற ஒன்றை நாம் எதிர்கொள்ளும்போது நாம் அனைவரும் அப்படித்தான் உணர முடியும்.

தினசரி வாழ்க்கையின் அவசர யுகத்தில், இயற்கை அன்னையுடனான இந்தத் தொடர்பை நாம் இழக்கிறோம். மனிதகுலம் இயற்கையை ஆக்கிரமித்து, தனது சொந்த குறுகிய கால நன்மைகளுக்காக அதைப் பயன்படுத்தி வருகிறது. இதற்கான விளைவை அனைவருமே எதிர்கொண்டாக வேண்டும். இந்தக் கோடையில், இந்தியாவின் பல பகுதிகள் பயங்கரமான தொடர் வெப்ப அலைகளைச் சந்தித்தன. சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கிலும் தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. வரவிருக்கும் தசாப்தங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பில் எழுபது சதவீதத்துக்கும் அதிகமான பகுதி கடல்களால் சூழப்பட்டுள்ளது. மேலும், புவி வெப்பமயமாதல் உலகளாவிய கடல் மட்டங்களின் உயர்வுக்கு வழிவகுக்கிறது. கடலோரப் பகுதிகளை மூழ்கடிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கடல்களும், அங்கு காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவை பல்வேறு வகையான மாசுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிர்ஷ்டவசமாக, இயற்கையின் மடியில் வாழும் மக்கள், நமக்கு வழி காட்டக்கூடிய பாரம்பரியங்களைக் கொண்டுள்ளனர். உதாரணமாக, கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள், காற்று, கடல் அலைகளின் மொழியை நன்கு அறிந்தவர்கள். நம் முன்னோர்களைப் பின்பற்றி கடலைக் கடவுளாக வழிபடுகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன என்று நான் நம்புகிறேன். அவை, அரசுகள், சர்வதேச அமைப்புகளிடமிருந்து வரக்கூடிய விரிவான நடவடிக்கைகள், குடிமக்களாக நாம் எடுக்கக்கூடிய சிறிய, உள்ளூர் நடவடிக்கைகள் ஆகும். இரண்டும் ஒன்றையொன்று இட்டு நிரப்புபவை. சிறந்த எதிர்காலத்திற்காக நம்மால் இயன்றதைத் தனியாகவும், உள்ளூரிலும் செய்ய உறுதியேற்போம். நம் குழந்தைகளுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.” இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x