Published : 08 Jul 2024 09:15 AM
Last Updated : 08 Jul 2024 09:15 AM
மும்பை: மும்பையில் அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரை 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை நகரில் இன்று (திங்கள்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில் 300 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பை தானே பகுதியில் கடந்த சனிக்கிழமை முதலே கனமழை பெய்வதால் அங்கு பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இடைவிடாத மழையால் மழைநீர் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை பேருந்து சேவைகளும் முடங்கியுள்ளது. இதனால் பொது மக்கள் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வரும் 10 ஆம் தேதி வரை மழை தொடரவே செய்யும். குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் கேரளாவிலும் இன்று (ஜூலை 8) கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT