Published : 08 Jul 2024 04:09 AM
Last Updated : 08 Jul 2024 04:09 AM

மலைப்பகுதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க ‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி தயார்: 2027-ல் ராணுவத்தில் சேர்க்கப்படும்

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் (டிஆர்டிஓ) எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் இலகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 25 டன் எடை கொண்ட இந்த பீரங்கி, குஜராத் மாநிலம் ஹசிராவில் நேற்று முன்தினம்பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

இந்த திட்டத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்த டிஆர்டிஓதலைவர் சமிர் கே. காமத் கூறும்போது, “நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக பீரங்கியை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இரண்டரை ஆண்டில் ஜோராவர் பீரங்கியை வடிவமைத்து தயாரித்துள்ளோம். இதை அடுத்த 6 மாதங்களுக்கு பல்வேறு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அதன் பிறகு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பாலைவனங்கள், உயரமான பகுதிகள் உட்பட கோடை காலம் மற்றும் குளிர் காலங்களில் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டி உள்ளது. சோதனைவெற்றிகரமாக முடிந்த பிறகு, வரும் 2027-க்குள் இந்திய ராணுவத்தில் இது சேர்க்கப்படும்” என்றார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புகிழக்கு லடாக் பகுதியில் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த பீரங்கிதயாரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ரஷ்யாவின் டி-90 மற்றும் டி-72(40 முதல் 50 டன் எடை) ரகபீரங்கிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் இவை மலைப்பகுதிகளில் பயன்படுத்துவது சிரமம். எனவே, இலகுரக பீரங்கிகள் தேவைப்படுகின்றன.

டி-72 மற்றும் டி-90 ஆகிய கனரக பீரங்கியைவிட, செங்குத்தான மலைப்பகுதியிலும் ஆற்றின் குறுக்கிலும் மற்றும் இதர நீர்நிலை பகுதிகளிலும் ஜோராவர் பீரங்கி சுலபமாக பயணிக்கும். இதன் எடை குறைவாக இருப்பதால், இதை போர் நடக்கும் இடத்துக்கு விமானம் மூலம் விரைவாக எடுத்துச் செல்லமுடியும். இது உயரமான கோணங்களில் சுடும் திறன் வாய்ந்தது.

இதுபோன்ற 354 பிரங்கிகளை ரூ.17,500 கோடிக்கு வாங்க, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கடந்த 2022-ல் முதற்கட்ட ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x