Published : 08 Jul 2024 03:54 AM
Last Updated : 08 Jul 2024 03:54 AM

மாஸ்கோ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்: அதிபர் புதினை சந்திக்கிறார்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார். இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்பங்கேற்றார். அதன்பிறகு 2022, 2023-ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகுஇந்திய, ரஷ்ய உச்சி மாநாடு ரஷ்யதலைநகர் மாஸ்கோவில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதில்பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார். அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் கூறியதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றார். இந்த சூழலில் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக ரஷ்யாவுக்கு அவர் செல்கிறார். தற்போதைய சூழலில் இந்திய பிரதமரின் ரஷ்ய பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தின்போது பிராந்திய, சர்வதேச நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள். பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு மதிய விருந்து அளிக்கஉள்ளார். ரஷ்யாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாஸ்கோவில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

இவ்வாறு இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்தார்.

உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்யா மீது ஐ.நா. சபையும், அமெரிக்காவும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. இதன்காரணமாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் முற்றிலுமாக நிறுத்தின. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

சென்னைக்கு கப்பல் வழித்தடம்: ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து மும்பைக்கு சரக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு சரக்கு கப்பல்கள் வந்து சேர 40 நாட்கள் ஆகிறது.

அதற்கு மாற்றாக ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் சரக்கு கப்பல்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் ரஷ்யாவில் இருந்து 20 நாட்களுக்குள் சரக்கு கப்பல்கள் இந்தியாவை வந்தடையும். நேரமும், எரிபொருளும் கணிசமாக மிச்சமாகும்.

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின்போது விளாடிவாஸ்டோக்- சென்னை கடல் வழித்தடம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் இருந்து மருந்துபொருட்கள், ஜவுளி, மின்னணு பொருட்கள், வேளாண் கருவிகளை அதிக அளவில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்திய ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தும் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் இடையே போர் தொடங்கியபோது இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி செய்தார். ‘இது போருக்கான காலம் அல்ல’ என்று ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி நேரடியாக கூறினார். தற்போது உக்ரைன் போரை நிறுத்த சர்வதேச அளவில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தற்போது அவர் ரஷ்யாவுக்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உக்ரைன் போரில் சுமுக தீர்வு காண்பது தொடர்பாக பிரதமர் மோடி சமரச பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் கூறும்போது, “இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடியின் வருகையை எதிர்நோக்குகிறோம். இந்திய பிரதமரின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என்றார்.

ரஷ்ய பயணத்தை நிறைவு செய்தபிறகு வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி ஆஸ்திரியா செல்கிறார். 41 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x