Published : 07 Jul 2024 05:03 PM
Last Updated : 07 Jul 2024 05:03 PM

மும்பையில் பயங்கரம்: அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதி பெண் பலி

ஓர்லி: மும்பையின் ஓர்லி பகுதியில் அதிவேகமாகச் சென்ற பிஎம்டபிள்யூ சொகுசு கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற பெண் பலியானார், அவரது கணவர் படுகாயமடைந்தார்.

மும்பை போலீஸாரின் கூற்றுப்படி, ஓர்லியில் உள்ள கோலிவாடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சசூன் துறைமுகப்பகுதியில் இருந்து மீன் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அதிகாலை 5.30 மணிக்கு அட்ரியா மால் அருகே வந்த போது, வேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று பின்னால் வந்து பைக் மீது மோதியுள்ளது. இதனால் பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலைகுலைந்ததால் தம்பதியினர் காரின் பானட் மீது விழுந்தனர்.

இதில் கணவர் பிரதீப் நகாவா சுதாரித்துக்கொண்டு கீழே குதித்துள்ளார். ஆனால் மனைவி காவேரி நகாவா (45)விடம் அதிக பொருகள் இருந்ததால் அவரால் குதிக்க முடியவில்லை. அவர் சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார். தம்பதியர் சிகிச்சைக்காக நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி காவேரி உயிரிழந்தார்.

இந்தநிலையில், ஓர்லி போலீஸார் விபத்து ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரை கைப்பற்றி, அதன் உரிமையாளரும் பால்கரின் உள்ளூர் சிவ சேனா (ஷிண்டே அணி) தலைவரான ராஜேஷ் ஷாவை கைது செய்துள்ளனர். விபத்து நடந்த போது காரில் இருந்ததாக நம்பப்படும் கார் ஓட்டுநர் மற்றும் ராஜேஷின் மகன் மிகிர் ஷா ஆகியோரையும் கைது செய்துள்ளனர். விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விபத்துக்கு பின்னர், சிவ சேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் ஆதித்ய தாக்கரே ஓர்லி காவல் நிலையத்துக்குச் சென்று உயிரிழந்த பெண்ணின் கணவரைச் சந்தித்தார். பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"மும்பையில் வாகன ஓட்டிகளின் டிரைவிங் ஸ்டைல் மற்றும் ஒழுக்கம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். எதிர்திசையில் வாகனங்கள் ஓட்டுவது, சிக்னல்களை பின்பற்றாதது, மூன்று பேர் செல்வது, போன்றவை மும்பையில் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. தற்போது ஹிட் அண்ட் ரன் சம்பவங்கள் நிகழத்தொடங்கியுள்ளன.

விபத்துக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அரசியலைத் தாண்டி இந்த நிலைமைகள் மேம்படுத்த வேண்டும். மும்பையின் போக்குவரதத்து ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். போக்குவரத்து விதிகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆதித்ய தாக்ரேவின் இந்தச் செயலைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “இந்த விபத்து ஒரு துரதிருஷ்டமான நிகழ்வு, வருத்தமளிக்கக் கூடியது. நான் காவல்துறையிடம் பேசியுள்ளேன். எந்த வித தலையீடும் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் யாரையும் பாதுகாக்காது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டம் அதன் கடமையைச் செய்யும். அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அரசின் நிலைப்பாடு” என்று எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புனேவில் 17 வயது சிறுவன் வேகமாக சொகுசு காரை ஓட்டி இருவர் இறந்த சம்வத்தினைத் தொடர்ந்து நடந்துள்ளது. மே 19ம் தேதி புனே விபத்து நடந்த போது அந்தச் சிறுவன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தச் சிறுவனுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் அதனை எதிர்த்து புனே போலீஸ் உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x