Published : 07 Jul 2024 04:29 PM
Last Updated : 07 Jul 2024 04:29 PM

அசாம் வெள்ளம் குறித்த அமித் ஷா கருத்து: கவுரவ் கோகாய் விமர்சனம்

புதுடெல்லி: அசாம் வெள்ளம் குறித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து அவரின் அறிவின்மை மற்றும் நேர்மையின்மையைக் காட்டுகிறது என்று அசாம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுரவ் கோகாய் விமர்சித்துள்ளார். அசாம் வெள்ளம் குறித்து வெள்ளம் போன்ற சூழ்நிலை என்று அமித் ஷா கூறியதற்காக கோகாய் இவ்வாறு சாடியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவுரவ் கோகாய் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "அசாம் வெள்ளச் சோகம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கும் கருத்து அவரின் அறியாமை மற்றும் நேர்மை பற்றாக்குறையை காட்டுகிறது. வெள்ளம் காரணமாக 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போதைய பேரழிவை வெள்ளம் போன்ற சூழ்நிலை என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அசாம் வெள்ளம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இவ்வாறு விசித்திரமான கருத்து கூறுவது இது முதல்முறையில்லை. இது பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வடகிழக்கு மக்களுக்கு பாஜக அரசு எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதையே காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “வெள்ளம் மற்றும் அரிப்பு காரணமாக அசாம் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மஞ்ஜூலி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் அரிப்பின் அளவு பயங்கரமாக இருக்கிறது.

கிராமங்கள், பள்ளிகள், ஏக்கர் கணக்கான நிலங்கள், வீடுகள் மற்றும் சுகாதார நிலையங்கள் ஆற்று வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுவதால் வெள்ளத்தை விட அரிப்பால் அசாம் மக்கள் நீண்ட கால பாதிப்பை சந்திக்கின்றனர்.

பருவநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகளைச் சந்திப்பது ஏழைப் பெண்களும் குழந்தைகளும் தான். அசாமில் வெள்ளம் மற்றும் அரிப்பு மேலாண்மைக்கு அதிகமான முதலீடுகள் தேவை. சர்வதேச நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகங்கள், மத்திய அரசு என ஒவ்வொருவரும் கரம் கொடுத்து உதவ வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கனமழை காரணமாக அசாமில் வெள்ளம் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நான் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாவுடன் பேசினேன். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் போர்கால அடிப்படையில் பணியாற்றி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டும் நிவாரணம் வழங்கியும் வருகின்றனர்" என்று சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதனிடையே, அசாமில் வெள்ள பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை மிகவும் மோசமடைந்துள்ளது. சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகள் அபாய அளவைத் தாண்டி ஓடுக்கொண்டிருக்கிறது. இந்தாண்டு வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் சுமார் 29 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தூப்ரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 7.95 லட்சம் மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x